நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூரில், மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூரில், மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Sep 2020 10:15 PM GMT (Updated: 1 Sep 2020 11:03 PM GMT)

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் மாணவர் பெருமன்றம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் மத்திய அரசு ஜே.இ.இ.-நீட் தேர்வுகளை நடத்துவதாக அறிவித்துள்ளது. தேர்வின்போது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பணியாளர்கள் என ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடும் சூழல் இருப்பதால் ஜே.இ.இ.-நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இந்திய மாணவர்் சங்கத்தின் சார்பில் நேற்று நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில துணை செயலாளர் துரை அருள்ராஜன், இந்திய மாணவர் சங்க மாநில துணை செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள் பாலமுருகன், பாரதசெல்வன், கோபி, சந்தோஷ், கவிதா, ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஜே.இ.இ. மற்றும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Next Story