நடைபயிற்சி சென்ற கிராம நிர்வாக உதவியாளர் அடித்துக்கொலை


நடைபயிற்சி சென்ற கிராம நிர்வாக உதவியாளர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 2 Sept 2020 4:36 AM IST (Updated: 2 Sept 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அருகே நடைபயிற்சி சென்ற கிராம நிர்வாக உதவியாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்தவர் சங்கர் ராஜ்(வயது 52). இவர், தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலருக்கு உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

வழக்கமாக இவர், வேலை பார்க்கும் அலுவலகத்தின் பின்னால் இருக்கும் பேரூராட்சி பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று மாலையும் அங்கு நடைபயிற்சிக்கு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் அலுவலகத்துக்கு திரும்பி வராததால் அங்கு வேலை பார்ப்பவர்கள் பூங்காவுக்கு சென்று பார்த்தனர்.

அடித்துக்கொலை

அப்போது சங்கர்ராஜ், அங்கு ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்து இருந்த சட்டை பட்டன்கள், செருப்புகள் பூங்காவில் சிதறிக்கிடந்தன. மர்ம ஆசாமிகள் அவரை விரட்டி விரட்டி அடித்துக்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

பின்னர் சங்கர்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த பீர்க்கன்காரணை போலீசார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

முன்விரோதம் காரணமா?

கொலை நடந்த இடத்தில் துணை கமிஷனர் சுவாமிநாதன், உதவி கமிஷனர் சகாதேவன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சங்கர்ராஜ் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அந்த பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது. அதில் தப்பி சென்றவர்கள் சங்கர்ராஜை அடித்துக்கொலை செய்தனரா? அல்லது முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிலரிடம் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் தாசில்தார் சரவணன் தலைமையில் ஏராளமான வருவாய்த்துறை ஊழியர்கள் பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் திரண்டனர். கொலை தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வீரகுமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடைபயிற்சி சென்ற வருவாய்த்துறை ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெருங் களத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story