பெரம்பலூர் அருகே பரபரப்பு: இறந்த தந்தைக்கு வீட்டுக்குள் சமாதி கட்டிய மகன் - அப்புறப்படுத்த முயன்ற போலீசாருடன் குடும்பத்தினர் தள்ளுமுள்ளு


பெரம்பலூர் அருகே பரபரப்பு: இறந்த தந்தைக்கு வீட்டுக்குள் சமாதி கட்டிய மகன் - அப்புறப்படுத்த முயன்ற போலீசாருடன் குடும்பத்தினர் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 2 Sept 2020 4:00 AM IST (Updated: 2 Sept 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே இறந்த தனது தந்தையின் உடலுக்கு வீட்டில் மகன் சமாதி கட்டினார். அதை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருடன் குடும்பத்தினர் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி(வயது 67). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு, தனது உடலை வீட்டிலேயே சமாதியாக வைத்துவிடுமாறு, தனது கடைசி ஆசையை குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராமசாமியின் மறைவு குறித்து ஈரோட்டில் இருந்த ராமசாமியின் மகனும், லாரி டிரைவருமான பாலகிருஷ்ணனுக்கு(40), அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். ஈரோட்டில் இருந்து களரம்பட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த பாலகிருஷ்ணன், இறுதி சடங்கிற்கு பின்னர் ராமசாமியின் உடலை அவரது விருப்பத்திற்கு ஏற்ப வீட்டருகே சமாதியில் வைக்க குழி தோண்டி உள்ளார்.

இதனை அறிந்த அக்கம், பக்கத்தினர் உள்ளிட்ட களரம்பட்டி கிராம மக்கள் சமாதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரவோடு, இரவாக ராமசாமியின் உடலை, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டிற்குள்ளேயே ஒரு பகுதியில் அடக்கம் செய்துள்ளனர். இதில், ராமசாமியின் உடலை ஜன்னலின் கீழ் பகுதியில் உட்கார்ந்த நிலையில் வைத்து, அதனை சுற்றி செங்கல் மற்றும் மண்ணால் சமாதி கட்டி, அதன்மேல் கல் வைத்தனர்.

இதையறிந்த கிராம மக்கள் இந்த சம்பவம் பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பெரம்பலூர் தாசில்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர், பெரம்பலூர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அடக்கம் செய்யப்பட்ட ராமசாமியின் உடலை வீட்டில் இருந்து அப்புறப்படுத்த சமாதியை உடைக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முயன்றனர்.

அதற்கு பாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருக்கும், பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. முடிவில் போலீசார் வீட்டிற்குள் புகுந்து பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுபோன்று வீட்டிலேயே அடக் கம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்று அவர்களுக்கு அறிவுரை கூறினர். இதைத்தொடர்ந்து நேற்று முதியவர் ராமசாமியின் சமாதியை அகற்றினர். பின்னர் அவருடைய உடலை அங்குள்ள மயானத்திற்கு எடுத்து சென்று கிராம மக்கள் உதவியுடன் தகனம் செய்தனர். இந்த சம்பவம் பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story