2 மாதத்திற்கு பிறகு குறைந்த பயணிகளுடன் அரசு பஸ்கள் இயங்கின - தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை


2 மாதத்திற்கு பிறகு குறைந்த பயணிகளுடன் அரசு பஸ்கள் இயங்கின - தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை
x
தினத்தந்தி 2 Sept 2020 4:30 AM IST (Updated: 2 Sept 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

2 மாதத்திற்கு பிறகு குறைந்த பயணிகளுடன் அரசு பஸ்கள் இயங்கின. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

தஞ்சாவூர்,

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தஞ்சை கரந்தையில் உள்ள புறநகர் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து அரசு பஸ்கள் புறப்பட்டு தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு சென்றன.

பஸ்களை இயக்குவதற்கு முன்பு பணிமனைக்கு வந்த டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் கிருமி நாசினியால் கைகளை கழுவினர். அதன்பிறகு பணிமனையில் இருந்து புறப்பட்ட பஸ்கள் அனைத்துக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டதால் 2 மாதத்திற்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டும் பயணம் செய்ய பொதுமக்களிடம் ஆர்வம் இல்லை. புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சை-புதுக்கோட்டை மார்க்கத்தில் அற்புதாபுரம் வரையும், தஞ்சை-மன்னார்குடி மார்க்கத்தில் வடுவூர் வரையும், தஞ்சை-நாகை மார்க்கத்தில் கோவில்வெண்ணி வரையும், தஞ்சை-திருச்சி மார்க்கத்தில் புதுக்குடி வரையும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

பஸ்களில் குறைந்த அளவிலேயே பயணிகள் இருந்தனர். 3 பேர் அமரக்கூடிய இருக்கைகளில் 2 பேரும், 2 பேர் அமரக்கூடிய இருக்கைகளில் ஒருவரும் அமர வைக்கப்பட்டனர். பயணிகள் அமரக்கூடிய இடத்தில் சமூக இடைவெளி குறியீடு போடப்பட்டிந்தது. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி, புதிய பஸ் நிலையம், பூதலூர், அம்மாப்பேட்டை, பாபநாசம், ஒரத்தநாடு உள்பட பல்வேறு ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பஸ்களில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டாததால் புதிய, பழைய பஸ் நிலையங்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெரும்பாலான பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மாவட்ட எல்லை வரை பஸ்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் நடந்து செல்வதை தவிர்க்க பிற மாவட்ட பஸ்கள் அந்தந்த எல்லையில் காத்திருந்தன. அதாவது அற்புதாபுரத்தில் இருந்து புதுக்கோட்டைக்கும், வடுவூரில் இருந்து மன்னார்குடி, திருவாரூருக்கும், கோவில்வெண்ணியில் இருந்து திருவாரூருக்கும், புதுக்குடியில் இருந்து திருச்சிக்கும் செல்லும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டது.

மண்டல அளவில் பஸ்கள் இயக்கும்போதாவது பயணிகள் அதிகஅளவில் பஸ்களில் பயணம் செய்தனர். ஆனால் தற்போது அந்த அளவுக்கு கூட பஸ்களில் பயணிகள் பயணம் மேற்கொள்ளவில்லை. இதனால் வருமானமும் மிக குறைவாக இருப்பதாக அரசு போக்குவரத்துத்துறையினர் தெரிவித்தனர். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 250 பஸ்கள் இயக்கப்பட்டன.

வெளியூரில் இருந்து பயணிகளுடன் பஸ் நிலையங்களுக்கு வந்த பஸ்களில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய பிறகு பஸ்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்களை இயக்க அனுமதி அளித்ததால் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. அதேபோல் மினிபஸ்கள், ஷேர் ஆட்டோகளும் இயக்கப்படவில்லை.

Next Story