ஆவடி மாநகராட்சி அலுவலகம் முன் கமிஷனரை முற்றுகையிட்ட பெண் களப்பணியாளர்கள்


ஆவடி மாநகராட்சி அலுவலகம் முன் கமிஷனரை முற்றுகையிட்ட பெண் களப்பணியாளர்கள்
x
தினத்தந்தி 1 Sep 2020 11:21 PM GMT (Updated: 1 Sep 2020 11:21 PM GMT)

ஆவடி மாநகராட்சி அலுவலகம் முன்பு கொரோனா களப்பணியாளர்களுக்கு சம்பளம் பாக்கி கேட்டு மாநகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி,

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் ஒரு வார்டுக்கு 20 பேர் என 48 வார்டுகளுக்கும் கல்லூரி மாணவிகள், பெண்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த களப்பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் முழுவதுமாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை தன்னார்வலர்களுக்கு சம்பளம் தரக்கோரி ஆவடி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் (வயது 55) என்பவர் காந்தி வேடமிட்டு ஆவடி மாநகராட்சி அலுவலக நுழைவுவாயிலில் தர்ணாவில் ஈடுபட்டார்.

கமிஷனரை முற்றுகையிட்டனர்

அப்போது ஆவடி மாநகராட்சி கமிஷனர் நாராயணன், தனது காரில் அங்கு வந்தார். இதை கண்ட கல்லூரி மாணவிகள் உள்பட பெண் களப்பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆவடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக அவரது வாகனத்தை சிறைபிடித்து, கமிஷனர் நாராயணனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் ஆவடி புதிய ராணுவ சாலையில் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட களப்பணியாளர்களை போலீசார் கலைந்துபோக செய்தனர்.

Next Story