மாவட்டம் முழுவதும் 140 பஸ்கள் ஓடின, குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனர்


மாவட்டம் முழுவதும் 140 பஸ்கள் ஓடின, குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்தனர்
x
தினத்தந்தி 2 Sept 2020 3:45 AM IST (Updated: 2 Sept 2020 6:44 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 140 பஸ்கள் ஓடின. இதில் குறைந்த அளவிலான பயணிகளே பயம் செய்தனர்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந்தேதி வரை அமலில் உள்ளது. ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக பஸ் போக்குவரத்து. மாவட்டத்துக்குள் மட்டும் இயங்கும் என்ற அரசின் அறிவிப்பு படி நேற்று முதல் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கின.

இதை முன்னிட்டு நேற்று முன்தினம் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் சுத்தம் செய்யப்பட்டது. பஸ்களை டிரைவர்கள் இயக்கி சிறு, சிறு பழுதுகளை சரிபார்த்தனர்.

நேற்று காலை முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடத் தொடங்கின. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. எனினும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. சில பஸ்களில் ஒரு சில பயணிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர். முககவசம் அணிந்திருந்த பயணிகள் மட்டுமே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போக்குவரத்து கழக வணிகப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பணிமனைகள் உள்ளன. இதில் 167 பஸ்கள் உள்ளது. தற்போது பல நாட்களுக்கு பிறகு 140 பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு கொரோனா அச்சம் உள்ளதால் அவர்கள் பஸ்சில் ஏற தயங்குகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விடும். தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லை பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி, வெள்ளகுட்டை, கண்ணமங்கலம், மழவந்தாங்கல், பாப்பாப்பட்டி, ஐயங்கார்புரம், மூங்கில்துறைப்பட்டு போன்ற எல்லைகளுக்கு இயக்கப்படுகிறது. நகர் பகுதிகளில் இருந்து 52 டவுன் பஸ்கள் கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. பஸ்சில் குறிப்பிட்ட அளவு பயணிகள் ஏறிய உடன் உடனடியாக இயக்கப்படும். கட்டாயம் முககவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பஸ்சில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கமாக செல்லும் கிராமப்புற பகுதிகள் அனைத்துக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதை கிராம மக்கள் பார்த்தால் விரைவில் பஸ்சை பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தேவை ஏற்பட்டால் மீதம் உள்ள பஸ்களும் அடுத்த கட்டமாக இயக்குவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆரணி பணிமனையில் 82 பஸ்கள் உள்ளன. அதில் நகர்ப்புறத்திற்கு 14 பஸ்களும், புறநகருக்கு 8 பஸ்களும் இயக்கப்பட்டன. காலை 6.30 மணிக்கு பஸ் நிலையத்திற்கு வந்த பஸ்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் போதிய பயணிகள் வராததால் காலதாமதமாக பஸ்கள் புறப்பட்டன.

ஆரணியில் இருந்து திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, சேத்துப்பட்டு பகுதிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டதாக பணிமனை மேலாளர் வெங்கடேசன் தெரிவித்தார்.

போளூரில் இருந்து செங்கத்துக்கு 2 பஸ்களும், திருவண்ணாமலைக்கு 2 பஸ்களும், கண்ணமங்கலத்துக்கு 2 பஸ்களும், ஆரணி, சேத்துப்பட்டு, வந்தவாசிக்கு தலா ஒரு பஸ்களும் மற்றும் வில்வராணி, மேல்சோழங்குப்பம், மங்கலம், அவலூர்பேட்டை, கலசபாக்கம் பகுதிகளுக்கு 3 பஸ்களும் என 12 பஸ்கள் இயக்கப்பட்டன.

பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என மேலாளர் சரணவன் தெரிவித்தார். பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கீழ்பென்னாத்தூர் பகுதியில் இயக்கப்பட்ட பஸ்களில் குறைவான பயணிகளே பயணித்தனர். சில பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கீழ்பென்னாத்தூரில் 5 மாதமாக மூடப்பட்டிருந்த கிளை நூலகம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. எனினும் வாசகர்கள் அமர்ந்து படிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. உறுப்பினர்கள் புத்தகங்களை வீட்டுக்கு வாங்கிச் சென்று படித்தனர்.

வேலூரில் இருந்து கண்ணமங்கலம் கூட்ரோடு வரை அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை பஸ்கள் கண்ணமங்கலம் கூட்ரோடு வரை இயக்கப்பட்டது. இதன் மூலம் திருவண்ணாமலை மற்றும் வேலூர் செல்லும் பயணிகள் இணைப்பு பஸ்கள் மூலம் பயணம் செய்ய வசதியாக இருப்பதாக தெரிவித்தனர்.

கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் நின்று செல்லும் பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப்பின் பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் பஸ்களில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.

செங்கம் போக்குவரத்து பணிமனையில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கும் மற்றும் மாவட்ட எல்லைக்கும் 10 பஸ்கள் இயக்கப்பட்டன. அன்றாட தேவைகளுக்காக நகரப் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த கிராமப்பகுதி பொதுமக்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story