திருமணமான ஒரு வாரத்தில் தீக்குளித்து சாவு: புதுப்பெண் தற்கொலையில் கணவர் கைது - பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் உருக்கமான தகவல்


திருமணமான ஒரு வாரத்தில் தீக்குளித்து சாவு: புதுப்பெண் தற்கொலையில் கணவர் கைது - பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் உருக்கமான தகவல்
x
தினத்தந்தி 2 Sept 2020 4:15 AM IST (Updated: 2 Sept 2020 6:56 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே திருமணமான ஒருவாரத்தில் தீக்குளித்து புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அவவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்,

வேலூரை அடுத்த ஜி.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் மகாதேவமந்திரி. இவருடைய மகள் சந்திரலேகாவிற்கும் (வயது 24) காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தை சேர்ந்த பாலாஜி (34) என்பவருக்கும் கடந்த மாதம் 23-ந் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவரும் விருந்து அழைப்பிற்காக (மறுவீடு) ஜி.ஆர்.பாளையத்துக்கு சென்றுள்ளனர். கடந்த 30-ந் தேதி வீட்டு மாடியில் உள்ள குளியலறையில் சந்திரலேகா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற உறவினர்கள் உடனடியாக சந்திரலேகாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வேலூர் மாஜிஸ்திரேட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று சந்திரலேகாவிடம் மரண வாக்குமூலம் பெற்றார். இந்த நிலையில் அன்று இரவே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரலேகாவின் கணவர் மற்றும் பெற்றோர், குடும்பத்தினரிடம் விசாரித்தனர். மேலும் புதுப்பெண் தற்கொலை குறித்து வேலூர் உதவிகலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தினார். அப்போது சந்திரலேகா தீக்குளிப்பதற்கு முன்பாக எழுதி வைத்த கடிதம் ஒன்றை அவருடைய பெற்றோர் உதவி கலெக்டரிடம் அளித்தனர்.

அந்த கடிதத்தில் சந்திரலேகா அவருடைய அப்பாவுக்கு எழுதியிருந்ததாவது:- அப்பா என்னை மன்னிச்சிடுங்க. நான் ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்ளவில்லை. எனது கணவர் திருமணமான நாள் முதல் என்னை சந்தேகத்துடன் தான் பார்க்கிறார். நீ ரொம்ப அழகா இருக்க. இதுவரை யாரையும் நீ காதலித்தது கிடையாதா? என்றும், என்னை விட்டு விட்டு உன் காதலனுடன் நீ சென்று விடுவாயோ என்று டார்ச்சர் செய்கிறான். இவன் கூட என்னால் ஒருநாள் கூட வாழமுடியாது. இதுபற்றி உங்களிடமும், அம்மாவிடம் சொன்னால் என்னை சமாதானப்படுத்தி அவனுடன் வாழ சொல்வீர்கள்.

என் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு கவுரவம் தான் முக்கியம். அவன் கூட வாழ்வதற்கு சாகலாம் என்று தோணுது. அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். 2 தங்கைகளுக்கும் நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுங்கள். இவனை மாதிரி மாப்பிள்ளை பார்த்து விடாதீர்கள். அடுத்த ஜென்மம் இருந்தா உங்களுக்கு தான் மகளாக பிறக்க வேண்டும். அப்போது இவனை மாதிரி ஒருத்தரை பார்க்க கூடாது என்று கடவுளை வேண்டிக்கிறேன். எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

கடிதம் மற்றும் உதவிகலெக்டர் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் சந்திரலேகாவிற்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியது, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தார்.

Next Story