மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 400 அரசு பஸ்கள் இயக்கம் + "||" + 400 government buses operating in Salem district

சேலம் மாவட்டத்தில் 400 அரசு பஸ்கள் இயக்கம்

சேலம் மாவட்டத்தில் 400 அரசு பஸ்கள் இயக்கம்
சேலம் மாவட்டத்தில் நேற்று 400 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
சேலம், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதனால் அரசு பஸ்கள் அனைத்தும் அந்தந்த பணிமனைகளில் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மண்டலங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதற்கிடையே கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளால் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்குள் நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள 23 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. மேலும் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களை சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன. அப்போது, பஸ்களில் செல்லும் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும், பஸ்களில் பின்வாசல் வழியாக ஏறி முன்வாசல் வழியாக இறங்க வேண்டும் என பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் பஸ்களில் ஏறும் முன் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்ததுடன், சானிடைசர் கொடுக்கப்பட்டது.

சேலம் நகர பகுதிக்கு செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், புறநகர் பகுதியான மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், சங்ககிரி கருமந்துறை, தலைவாசல் உள்ளிட்ட ஊர்களுக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் நேற்று 35 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன. காலை நேரங்களில் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. பின்னர் நேரம் செல்ல, செல்ல பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

இதுகுறித்து சேலம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் இன்று (நேற்று) 35 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அதாவது 400 பஸ்கள் வரை தற்போது இயக்கப்பட்டுள்ளன. பயணிகள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து உடனடியாக கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்கள் 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்படுகிறது. முககவசம் அணியாமல் பஸ்களில் செல்ல அனுமதி கிடையாது.

மேலும் பயணிகளுக்கும், டிரைவர், கண்டக்டர்களுக்கு பஸ் நிலையங்களில் கொரோனா வைரஸ் பரவு வதை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பணிமனைகளில் இருந்து பஸ் வெளியே வரும் போதும், மீண்டும் பணிமனைக்கு உள்ளே செல்லும் போதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தேவையான முககவசம், சானிடைசர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாவட்டத்துக்குள் நேற்று அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. குறைவான பயணிகளுடன் பஸ்கள் இயக்கினால் நஷ்டம் ஏற்படலாம் என கருதி பஸ்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆத்தூர் பகுதியில் நேற்று 25 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான நத்தக்கரை சுங்கச்சாவடி வரையிலும், பெரம்பலூர் மாவட்ட எல்லையான உடும்பியம் வரையிலும், நாமக்கல் மாவட்ட எல்லையான மெட்டாலா வரையிலும், அரியலூர் மாவட்ட எல்லையான தம்மம்பட்டி வரையிலும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.