மாவட்டம் முழுவதும் 94 அரசு பஸ்கள் இயக்கம் - பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது


மாவட்டம் முழுவதும் 94 அரசு பஸ்கள் இயக்கம் - பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது
x
தினத்தந்தி 1 Sep 2020 10:15 PM GMT (Updated: 2 Sep 2020 2:02 AM GMT)

மாவட்டம் முழுவதும் 94 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் முழுவதும் 94 அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்குள் பொதுபோக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கிய நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் 94 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. 82 டவுன் பஸ்களும், 12 புறநகர் பஸ்களும் நேற்று காலை 6.15 மணி முதல் இயக்கப்பட்டன. விருதுநகர் பணிமனையில் இருந்து மட்டும் 16 டவுன் பஸ்களும், 4 புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டன.

பொதுபோக்குவரத்து தொடங்கியதும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழக ஊழியர்களும், பயணிகளும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் காலையில் டவுன் பஸ்களில் 10 பயணிகளுக்கும் குறைவாகவே பயணிகள் செல்லும் நிலை இருந்தது. மதியம் ஒவ்வொரு பஸ்சிலும் 50 சதவீத பயணிகள் பயணம் செய்யும் நிலை இருந்தது.

பொதுபோக்குவரத்து தொடங்குவதற்குமுன் வெறிச்சோடி கிடந்த பழைய பஸ்நிலையத்தில் பஸ்போக்குவரத்து தொடங்கிய பின்பும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. தனியார் பஸ்களும் மினிபஸ்களும் இயக்கப்படவில்லை. விருதுநகரில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆகிய நகர் பகுதிகளுக்கு மட்டுமே டவுன் பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் கிராம பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. விருதுநகரை ஒட்டி உள்ள மதுரை மாவட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்க அனுமதி இல்லாததால் பெரும்பாலானோர் பஸ்நிலையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். பஸ் போக்குவரத்து தொடங்கிய முதல் நாளான நேற்று போக்குவரத்து கழக அதிகாரிகள் யாரும் ஆய்வுக்கு வரவில்லை. இதனால் பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்குவது தடைபட்டது.

இன்றாவது கிராம பகுதிகளுக்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story