1,300 ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


1,300 ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 2 Sept 2020 3:15 AM IST (Updated: 2 Sept 2020 8:02 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 1,300 ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர், 

ரேஷன்கடை பணியாளர்களை கொரோனா மருத்துவக்குழு காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். கொரோனாவால் இறந்த பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் 100 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். இருப்பினும் ரேஷன் கடை பணியாளர்கள் பிரச்சினையில் அரசின் கருத்தும், அதிகாரிகளின் கருத்தும் மாறுபட்டதாக உள்ளது. 5 முறை நடத்திய பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் இது வரை ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேறவில்லை. இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1-ந் தேதி (அதாவது நேற்று) முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,400 கடைகளில், 1,300 ரேஷன் கடைகளை அடைத்து நேற்று பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, வட்ட செயலாளர் கந்தன், மாவட்ட துணை தலைவர் முத்துபாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ், கடலூர் சரவணபவ கூட்டுறவு சங்க தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரேஷன் கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சிதம்பரத்தில் மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரேஷன் கடை பணியாளர்கள் இன்று (புதன்கிழமை) மாவட்ட துணை பதிவாளர் அலுவலகங்கள் முன்பும், நாளை (வியாழக்கிழமை) மாவட்ட இணை பதிவாளர் அலுவலகங்கள் முன்பும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். 5-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

Next Story