சுற்றுலாவுக்காக வருவதற்கு மட்டுமே தடை: வெளியூரில் இருக்கும் நீலகிரியை சேர்ந்தவர்களுக்கு உடனடி இ-பாஸ் - கலெக்டர் தகவல்
சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், வெளியூரில் இருக்கும் நீலகிரியை சேர்ந்தவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்படுகிறது. சுற்றுலா தலங்கள் திறக்கப்படாது. வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை நீடிக்கிறது. பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு அவசிய, அவசர காரணங்கள் மற்றும் வேலை, வியாபாரம் நிமித்தமாக வருகிறவர்களின் ஆவணங்களை சரிபார்த்து இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று விட்டு திரும்பினால் முகவரியுடன் கூடிய ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களோடு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். அவர்கள் எவ்வித சிரமுமின்றி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து இ-பாஸ் முறை செயல்படுத்தப்படுகிறது.
அரசு அனுமதித்ததை தொடர்ந்து கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளன. 3 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி மூலம் கோவில்கள் சுத்தப்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் கூடக்கூடாது. முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் வர வேண்டாம். அவர்கள் பஸ்சில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். வழிபாட்டு தலங்களில் 1,075 சதுர அடிக்குள் சமூக இடைவெளி விட்டு 20 பேர் கலந்து கொள்ளலாம். நீலகிரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், காட்டேஜ்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. வேலை நிமித்தமாக நீலகிரிக்கு வருகிறவர்கள் தங்கி கொள்ளலாம். சுற்றுலா நோக்கத்தோடு தங்க அனுமதி இல்லை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளி மாவட்டங்களில் இருந்து பலர் வந்து செல்வதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அறிகுறி தென்பட்டவுடன் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மசினகுடியில் புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2 நாட்கள் கேமராக்கள் மூலம் புலி எங்கு செல்கிறது குறித்து கண்காணிக்கப்படுகிறது. ஆட்கொல்லி புலி என கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story