கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் - போக்குவரத்து பாதிப்பு + "||" + To transfer the temple land to the police Villagers protest against road blockade - Traffic damage
கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் - போக்குவரத்து பாதிப்பு
திருப்பூர் அருகே கோவில் நிலத்தை காவல்துறைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீரபாண்டி,
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் புகழ் பெற்ற பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 11.16 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 2 வாரம் நடைபெறும் திருவிழாவை ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், சின்னகவுண்டன்புதூர், குள்ளேகவுண்டன்புதூர், குளத்தூர்புதூர் ஆகிய 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்துவார்கள்.
திருவிழாவின் போது கோவில் அருகே உள்ள காலி இடத்தில் சிறுவர்களின் விளையாடும் சாதனங்கள், தற்காலிக கடைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்படும். இந்த நிலையில் இந்த காலி இடத்தை இந்து சமய அறநிலையத் துறையினர், கிராம மக்களின் கருத்துகளை கேட்காமல் காவல் துறைக்கு மாற்ற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இது பற்றிய விவரம் அந்த பகுதி பொதுமக்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து கோவில் நிலத்தை காவல் துறைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, மங்கலம் சாலை பெரிய ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் நேற்று காலை 8 மணிக்கு திடீரென்று 5 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தம், தமிழக அரசே கோவில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றாதே என்கிற பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய தீர்வு கிடைக்கும் வரை மறியலை கைவிடப் போவதில்லை என்று பொதுமக்கள்உறுதியாக கூறிவிட்டனர்.
இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் நவீன்குமார் மற்றும் தெற்கு தாசில்தார் சுந்தரம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (இன்று) ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவிலில், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த பிறகு, ஊர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.