அ.தி.மு.க. அரசு மீனவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் - மீனவ மக்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தளவாய்சுந்தரம் பேச்சு
அ.தி.மு.க. அரசு மீனவ மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று மீனவ மக்களுடனான ஆலோசனை கூட்டத்தில் தளவாய்சுந்தரம் பேசினார்.
நாகர்கோவில்,
இரையுமன்துறை மீனவ மக்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலை வகித்தார். இரையுமன்துறை ஊர் பொறுப்பாளர்கள் மோகன், ஜெயராஜ், சன்னி, விஜயன், ஜாண் பெஸ்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், இரையுமன்துறையில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை அதிர்வுகள் ஏற்படாத வகையில் வலுவாக அமைக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளுக்கு பின்புறம் உள்ள கால்வாயில், நீர் அதிர்வு அலைகளால் வீடுகள் பாதிக்கப்படுகிறது. எனவே, கால்வாய் கரையோரம் பாதுகாக்கப்பட்ட உறுதியான தடுப்புசுவர் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசு மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது. ஏற்கனவே, இரையுமன்துறை பகுதியில் ரூ.33 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, போடப்படவுள்ள இரையுமன்துறை சாலை அதிர்வு ஏற்படாத வண்ணம், அமைப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மாவட்ட கலெக்டரின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவும் சாலைப்பணிகள் நடைபெறும்போது, ஆய்வுசெய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாவட்ட கலெக்டரின் கண்காணிப்பில், அந்த பகுதி கால்வாய் கரையோரம் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைப்பதற்கு பொறியாளர்களின் ஆலோசனை பெறப்படும். அதனடிப்படையில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு எடுத்து சென்று அதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் நலனில் அக்கறைகொண்டு, ஜெயலலிதா வழியில் செயல்படும் அ.தி.மு.க. அரசு மீனவ மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய உறுப்பினர் யூஜின், தேசிய கடல் சமூக அறிவியல் துறை பேராசிரியர் ஆன்றனி ராஜ், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய நிர்வாக குழு உறுப்பினர் ஜோஸ்பில்பின், மேல்புறம் ஒன்றியசெயலாளர் ஜீன்ஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், இரையுமன்துறையில் சாலை போடப்படவுள்ள பகுதியினையும், சானல் கரையினையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story