உளுந்தூர்பேட்டை அருகே, வாலிபரை கொன்று உடலை எரித்த கொடூரம் - ஓராண்டுக்கு பின் கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி; பரபரப்பு தகவல்கள்
உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டது. இதில் ஓராண்டுக்கு பின்னர் துப்புதுலங்கி தற்போது அவரது மனைவி கள்ளக்காதலனுடன் போலீசில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம். இவரது மகன் பாலமுருகன்(வயது 25). கொத்தனார். இவருடைய மனைவி மணிமேகலை(23). இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2-வதாக பெண் குழந்தை பிறந்தது.
இதன் பின்னர் 14-6-2019 அன்று வீட்டில் இருந்த, பாலமுருகன் திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு என்ன நேர்ந்தது? என்றும் தெரியாமல் போனது. இதுகுறித்து அவரது உறவினரான கோவிந்தராஜ்(45) என்பவர் அளித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் மணிமேகலைக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டனுக்கும்(26) கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களது நடவடிக்கையை நோட்டமிட்டு வந்தனர். அவர்களுக்குள் இருந்த கள்ளத்தொடர்பை உறுதிப்படுத்திய போலீசார், பாலமுருகன் மாயமான விவகாரத்தில் இவர்களுக்கு தான் உண்மை தெரியும் என்று கருதினர். அதன்படி இருவரையும் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பாலமுருகனை அடித்து கொலை செய்துவிட்டதாக மணிகண்டன் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். மேலும் இதற்கு உடந்தையாக மணிகண்டனின் அண்ணன் தனசேகர்(30) என்பவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிமேகலை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து மணிகண்டன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
பாலமுருகன் மனைவி மணிமேகலைக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு, மணிமேகலைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு தனது குழந்தையை பார்க்க சென்ற பாலமுருகன், குழந்தை எனது(மணிகண்டனின்) சாயலில் இருப்பதாக கூறி, மருத்துவமனையில் வைத்து மனைவியிடம் சண்டை போட்டு விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதுபற்றி மணிமேகலை எனக்கு போன் செய்து தெரிவித்தார். இனிமேல் பாலமுருகன் உயிரோடு இருந்தால் எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார், அதனால் இன்றோடு கதையை முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி அன்றைய தினம் இரவு பாலமுருகன் வீட்டுக்கு வந்தார். வீட்டில் அவர் மட்டுமே இருந்தார். இதையடுத்து, நானும் வீட்டுக்குள் நுழைந்து, கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டேன். எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டோம்.
அதில், பாலமுருகனின் தலையை சுவற்றில் அடித்தேன். பின்னர் பித்தளை தவலையாலும் தலையில் அடித்தும், சுத்தியலால் தாக்கியும் அவரை கொலை செய்தேன். இதையடுத்து நடந்ததை எனது அண்ணன் தனசேகரிடம் தெரிவித்து, கொலையை மறைக்க திட்டமிட்டோம். இதற்காக ஒரு சாக்கு பையில் உடலை வைத்து கட்டி, மோட்டார் சைக்கிளில் பல்லாத்தூர் அருகே வாய்க்காலுக்கு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்றோம்.
அங்கு உடலை தீ வைத்து எரித்து, சாம்பலை அருகே உள்ள ஆற்று நீரில் கரைத்தோம். மேலும் உடல் எரிந்த பிறகும் கிடந்த எலும்புகள் மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றை பெரிய கருங்கல்லை கொண்டு சுக்குநூறாக நொறுக்கி, ஆற்று நீரில் வீசினோம். அதே நேரத்தில் பாலமுருகனின் வீட்டில் நாங்கள் சண்டை போட்டபோது இருந்த தடயங்களையும் அளித்து விட்டோம்.
இதையடுத்து எதுவும் தெரியாதது போன்று இதுநாள் வரைக்கும் ஊரில் வலம் வந்து கொண்டிருந்தேன். அதே நேரத்தில் எனது கள்ளக்காதலியையும் அவ்வப்போது சந்தித்து மகிழ்ச்சியுடன் இருந்து வந்தேன். இந்த சூழ்நிலையில் போலீசாரின் வலையில் சிக்கி விட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொத்தனார் பாலமுருகன் மாயமாகி ஓராண்டுக்குமேல் ஆகும் நிலையில், தற்போது அவர் மனைவியின் கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story