கரூர் மாவட்டத்தில், கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு
கரூர் மாவட்டத்தில் கோவில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
கரூர்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி போக்குவரத்து இயங்கும், நூலகங்கள் திறக்கப்படும், பூங்காக்கள் திறக்கப்படும், அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என பல்வேறு முக்கிய தளர்வுகளை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதில் நேற்று முன்தினம் முதல் மாவட்டத்திற்கு உட்பட்ட பசுபதீஸ்வரர்கோவில், தாந்தோணிமலையில் அமைந்துள்ள கல்யாணவெங்கடரமணசுவாமி கோவில், வெண்ணெய்மலையில் அமைந்துள்ள முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன.
இதையொட்டி கோவிலை சுற்றி கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கைகளை சுத்தம் செய்த பிறகு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
2-வது நாளான நேற்று அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இதனையடுத்து கோவில் ஊழியர்கள் பக்தர்களை சமூக இடைவெளியை பின்பற்றியும் வரிசை முறையில் சென்றும் சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தி அனுமதித்தனர்.
Related Tags :
Next Story