பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ.வினர் காத்திருப்பு போராட்டம்


பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ.வினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2020 3:45 AM IST (Updated: 3 Sept 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ.வினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னமராவதி, 

ஆலவயல் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட 16 தொழிலாளர்களுக்கு ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி 8 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன் சம்பளத்துடன் விடுப்பும், அரசு ஆணை 180-ன்படி உதவித் தொகையும் வழங்க வேண்டும். சிகிச்சை பலனின்றி இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

ஆபரேட்டர்களுக்கு சம்பளமாக ரூ.4ஆயிரம் மற்றும் இதர படிகள் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர் அனைவருக்கும் முக கவசம், கையுறை, கிருமி நாசினிகள் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன் அனைவரையும் காப்பீட்டு திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ. வினர், புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ) மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமையில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொதுச்செயலாளர் திரவியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் புதுக்கோட்டையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

புதுக்கோட்டையில், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) நடத்திய பேச்சுவார்த்தையில் மாவட்டம் முழுவதும் கணக்கெடுத்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு ஒரு வாரத்திற்குள் மே மாதம் வரையிலான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Next Story