திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க கோரி வியாபாரிகள் உண்ணாவிரதம்; 32 பேர் கைது - திடீர் சாலை மறியலால் பரபரப்பு


திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க கோரி வியாபாரிகள் உண்ணாவிரதம்; 32 பேர் கைது - திடீர் சாலை மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Sept 2020 3:45 AM IST (Updated: 3 Sept 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்திய வியாபாரிகள் 32 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காய்கறி மொத்த வியாபாரம் தற்போது திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரெயில்வே மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்த தற்காலிக மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை, மழை பெய்தால் ஒதுங்குவதற்கு கூட இடமில்லை, காய்கறிகள் மழைநீரில் அழுகி சேதமடைகின்றன. எனவே காந்தி மார்க்கெட்டை திறந்து மொத்த வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனை வலியுறுத்தி பலமுறை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். ஆனால் காந்தி மார்க்கெட் மற்றும் கள்ளிக்குடி மார்க்கெட் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடைபெற்றுவரும் வழக்கு நிலுவையில் இருப்பதால் காந்தி மார்க்கெட்டை திறப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இதுவரை அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும், காந்தி மார்க்கெட் பிரச்சினை தொடர்பான வெள்ளை அறிக்கையை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாபாரி எஸ்.கே.டி.பாண்டியன் என்பவர் நேற்று காலை காந்தி மார்க்கெட் பிரதான வாசல் முன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இவருக்கு ஆதரவாக பல்வேறு வியாபார சங்க பிரமுகர்களும் பங்கேற்றனர்.

அப்போது போலீசார் அங்கு வந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், உண்ணாவிரத போராட்டத்திற்கு முறைப்படி அனுமதி பெறப்படாததால் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் வியாபாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தாசில்தார் மோகன் அங்கு வந்து வியாபார சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது காந்தி மார்க்கெட் திறக்கப்படும் தேதியை அறிவிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று வியாபாரிகள் கூறினார்கள். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனைத்தொடர்ந்து அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருந்ததாக எஸ்.கே.டி.பாண்டியன், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ஷபி அகமது, பா.ஜ.க.மண்டல் தலைவர் ராஜசேகரன் உள்பட 32 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி திருச்சி-மதுரை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைப்பதற்காக கொண்டு சென்றனர். அப்போது அந்த மண்டபத்தின் கேட் பூட்டப்பட்டு இருந்ததால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மண்டபத்தின் பூட்டை திறந்து போலீசார் அவர்களை உள்ளே அனுப்பினார்கள். உள்ளே அடைக்கப்பட்டு இருந்த வியாபாரிகளுக்கு மதிய உணவு போலீசார் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் தங்களுக்கு உணவு தேவையில்லை, மாலை 5 மணிக்குப் பின்னரும் நாங்கள் வெளியே வர மாட்டோம் இங்கேயே இருப்போம் காந்தி கடை திறக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என கூறினார்கள்.

Next Story