கந்து வட்டி பிரச்சினை: பொன்மலை ரெயில்வே ஊழியரை கடத்திச்சென்று அடி-உதை - நடிகர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


கந்து வட்டி பிரச்சினை: பொன்மலை ரெயில்வே ஊழியரை கடத்திச்சென்று அடி-உதை - நடிகர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Sept 2020 3:45 AM IST (Updated: 3 Sept 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

கந்து வட்டி பிரச்சினையில் பொன்மலை ரெயில்வே ஊழியரை கடத்திச்சென்று அடித்து உதைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். நடிகர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு, மறைந்த நடிகர் அலெக்சின் மருமகனும், நடிகருமான ஜெரால்டு என்பவரிடம் ரூ.35 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

அதற்கு வட்டி கட்டி வந்த நிலையில் கொரோனா பிரச்சினையால் சில மாதமாக பணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த சனிக்கிழமை வழக்கம்போல் வேலை முடிந்து பணிமனையில் இருந்து வெளியே வந்த ஆறுமுகத்தை, 3 பேர் வழிமறித்து இருசக்கர வாகனத்தில் அவரை கடத்திச்சென்றனர்.

பின்னர் தென்னூர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து ஒரு நாள் முழுவதும் அவரை கட்டி வைத்து, வட்டிக்கு மேல் வட்டி கேட்டு அடித்து உதைத்ததாக தெரிகிறது. பின்னர், அவர்களிடம் கால அவகாசம் கேட்டு, அங்கிருந்து தப்பி வந்த அவர் இதுபற்றி பொன்மலை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரில், நடிகர் ஜெரால்டிடம் ரூ.35 ஆயிரம் கந்து வட்டிக்கு வாங்கி இருந்தேன். கொரோனா காரணமாக கடந்த சில மாதமாக வட்டி கட்டவில்லை. இதனால் வட்டிக்கு மேல் வட்டிகேட்டு மிரட்டி பணி முடித்து விட்டு வெளியே வந்த என்னை 3 பேர் கடத்திச்சென்று கட்டி வைத்து அடித்து உதைத்தனர் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் பொன்மலை போலீசார் இதுகுறித்து பாலக்கரை மல்லிகை புரத்தை சேர்ந்த நடிகர் ஜெரால்டு, மரியம் நகரை சேர்ந்த ஜெஸ்டின் ஜெபராஜ் (38) மற்றும் விசு ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் ஜெஸ்டின் ஜெபராஜை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நடிகர் ஜெரால்டு, விசு ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story