சாராய வேட்டைக்கு சென்றபோது போலீசாரை தாக்கிய சாராய வியாபாரிகள் 2 பேர் சரண்
அணைக்கட்டு மலைப்பகுதியில் சாராயவேட்டைக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய சாராய கும்பலை சேர்ந்த 2 பேர் சரண் அடைந்துள்ளனர்.
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலைப்பகுதிகளில் சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அணைக்கட்டு போலீசார் 7 பேர் கொண்ட குழுவினர் அல்லேரி மலைக்கு கடந்த 29-ந் தேதி சென்றனர். அங்கு விழிப்புணர்வு கூட்டத்தை முடித்துவிட்டு கொல்லி மரத்து கொல்லை என்ற பகுதியில் சாராய வேட்டைக்கு சென்றனர்.
அப்போது சாராய வியாபாரி கணேசன் மற்றும் துரைசாமி அவரது உறவினர்கள் சுமார் 30 பேர் போலீசாரை மடக்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஏட்டு ராக்கேஷ் என்பவர் திடீரென துரைசாமி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைபார்த்த அவரது உறவினர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஏட்டு ராக்கேஷ் தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதை தடுக்க சென்ற மற்ற போலீசாரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து சாராய கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசாரை தாக்கிவிட்டு தலைமறைவான சாராய கும்பலை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் மற்றும் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில் நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசார் உள்பட 120-க்கும் மேற்பட்ட போலீசார் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சாராய கும்பலை இரவு பகலாக தேடிவந்தனர்.
அவர்கள் மறைந்திருக்கும் இடத்தை செல்போன் டவர்மூலம் கண்டுபிடித்து 31-ந் தேதி அவர்களை பிடிக்க சிவநாதபுரம் என்ற மலைப்பகுதிக்கு சென்றபோது போலீசாரை நோக்கி, சாராயகும்பல் துப்பாக்கியால் சுட்டது. அதைத்தொடர்ந்து சாராய கும்பலை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இரவு 7 மணிக்கு சாராய வியாபாரி கணேசன் (வயது 28) மற்றும் அவரது உறவினர் துரைசாமி (52) ஆகிய 2 பேர் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த 2 பேரையும் அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story