ஆம்பூர் அருகே, அ.ம.மு.க. பிரமுகர் கொலையில் மனைவி-மாமியார் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
ஆம்பூர் அருகே நடந்த அ.ம.மு.க. பிரமுகர் கொலையில் மனைவி, மாமியார் உள்பட 4 பேர் கைதாகினர். மேலும் 2 பேர் சிக்கினர். நடத்தையில் சந்தேகப்பட்டு குடிபோதையில் தினமும் கொடுமைப்படுத்தியதால் கொன்றதாக மனைவி வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 43). இவர், மாதனூர் ஒன்றிய அ.ம.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி ஜெயந்தி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி ஆலாங்குப்பம் பகுதியில் பாலாறுக்குச் செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் தரைப்பாலத்தின் கீழ் ரமேஷ்பாபு தலை, உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனையில் ரமேஷ்பாபு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து, மனைவி ஜெயந்தி, மாமியாரும், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற ஊழியரான சரஸ்வதி, இவர்களுடைய உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் மாமியார் சரஸ்வதி, மனைவி ஜெயந்தி ஆகியோர் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து ரமேஷ்பாபுவை கொலை செய்தது தெரிய வந்தது. கொலையில் சம்பந்தப்பட்ட ஆம்பூர் அருகே மிட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த கவுதம் (20), வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ்ராஜ் (23) ஆகியோரை போலீசார் கைது செய்து ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர்.
மேலும் ரமேஷ்பாபுவின் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். ரமேஷ்பாபு கொலையில் சம்பந்தப்பட்ட மிட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பள்ளிகொண்டா அருகே செதுவாலை கிராமத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான மனைவி ஜெயந்தி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய கணவர் ரமேஷ்பாபு தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, எனது நடத்தையில் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்தார். எனது செல்போனை வாங்கி யார், யாருக்கு போன் போட்டாய்? எனக் கேட்டு தொடர்ந்து கொடுமைச் செய்து வந்ததால் இதுகுறித்து எனது தாயாரிடம் கூறினேன். கணவரின் கொடுமை அதிகரித்ததால் எனது அம்மா மற்றும் உறவினர்கள் உதவியோடு கணவரை கொலை செய்தோம்.
ரமேஷ்பாபுவை கொலை செய்ய ஒரு மாதத்துக்கு முன்பே சதித்திட்டம் திட்டினோம். ஏற்கனவே ஒரு முறை அவர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றோம். அப்போது அவர் காயத்துடன் உயிர் தப்பினார். தற்போது பாலாற்றுப் பகுதிக்கு வரவழைத்து, கணவரை கொலை செய்து திட்டத்தைக் கச்சிதமாக முடித்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசாரிடம் சிக்கி உள்ள 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story