மாவட்டத்தில் பலத்த மழை அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 61 மி.மீ. பதிவு
மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதில் சிங்கம்புணரி பகுதியில் அதிகபட்சமாக 61 மி.மீ. மழை பதிவாகியது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த கண்மாய், ஊருணி குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சிவகங்கை நகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று காலை வரை நீடித்தது. இதேபோல் மானாமதுரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் முழுவதும் தூறல் மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால் தாழ்வான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இளையான்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பஸ்நிலையம், கண்மாய்கரை பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இளையான்குடி பகுதியில் சாரல் மழையினால் கோடைக்கால பயிராக பயிரிடப்படும் நேரடி நெல் விதைப்பு பணியை தொடங்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முன்னதாக ஏற்கனவே நேரடி நெல் விதைப்பு பணியை தொடங்கிய விவசாயிகளுக்கு இம்மழை அந்த பயிர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இருந்தது.
காரைக்குடி பகுதியில் மழை பெய்ததால் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தேவகோட்டை மற்றும் கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெய்த மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் சிங்கம்புணரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நேற்று பகல் முழுவதும் வெயில் தாக்கம் இல்லாமல் இந்த பகுதி முழுவதும் குளுமையான சூழ்நிலை நீடித்தது.
கண்மாய், ஊருணி பகுதிக்கு இந்த மழையினால் தண்ணீர் வரத்து இருந்தது. இதேபோல் திருப்புவனம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் இந்த பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சிவகங்கை-28.2, மானாமதுரை-54, இளையான்குடி-11, திருப்புவனம்-15.4, தேவகோட்டை-9.4, காரைக்குடி-43, திருப்பத்தூர்-8, காளையார்கோவில்-9.8, சிங்கம்புணரி-61.2 ஆகும். மாவட்டத்தில் அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 61 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 8 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story