மதுக்கரை மலை கிராமத்தில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி - கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை


மதுக்கரை மலை கிராமத்தில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி - கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Sept 2020 3:15 AM IST (Updated: 3 Sept 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கரை மலை கிராமத்தில் 2 சிறுத்தை புலிகள் நடமாடுவதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். அவற்றை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

போத்தனூர்,

கோவை அருகே உள்ள மதுக்கரை வனச்சரகத்தில் காட்டு யானை, சிறுத்தைப்புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி, ஆடு, மாடுகளை கடித்து அட்டகாசம் செய்தது. அதை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கரை அருகே உள்ள விநாயகர் கோவில் வீதி மலைக்கிராமம் பகுதியில் புகுந்த சிறுத்தைப்புலி அங்கு பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆட்டு குட்டிகளை அடித்து கொன்றது. அதன் பின்னர் நீண்ட நாட்களாக அந்த பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

தற்போது மீண்டும் சிறுத்தைப்புலிகள் நடமாடி வருகிறது. மதுக்கரை மலை கிராமமான அய்யப்பன்கோவில் வீதி, காந்திநகர் குடியிருப்பு அருகே சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுக்கரை வனத்துறையினர் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு ஒரு நாயை சிறுத்தைப்புலி அடித்து தின்றது தெரியவந்தது. அத்துடன் அங்குள்ள மலையில் 2 சிறுத்தைப்புலிகள் பதுங்கி இருந்து அடிக்கடி வெளியே வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

எனவே அந்த சிறுத்தைப்புலிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மலைக்கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story