கோவையில் கொரோனா அச்சம்: போதிய பயணிகள் வராததால் 202 பஸ்கள் ரத்து - ரூ.3 கோடிக்கு பதிலாக ரூ.26 லட்சம் வருவாய்


கோவையில் கொரோனா அச்சம்: போதிய பயணிகள் வராததால் 202 பஸ்கள் ரத்து - ரூ.3 கோடிக்கு பதிலாக ரூ.26 லட்சம் வருவாய்
x
தினத்தந்தி 3 Sept 2020 3:45 AM IST (Updated: 3 Sept 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சம் காரணமாக போதிய பயணிகள் வராததால் 202 பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. ரூ.3 கோடிக்கு பதிலாக ரூ.26 லட்சம் மட்டுமே வருவாயாக கிடைத்தது.

கோவை,

கொரோனா பரவலை தடுக்க பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் கோவை கோட்டத்தில் உள்ள கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் 800 பஸ்கள் இயக்கப்பட்டன. கோவையில் மட்டும் 401 அரசு பஸ்கள் ஓடின.

மிக குறைந்த எண்ணிக்கையில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட் டத்துக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கினாலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்தனர். பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பயணிகள் தங்களின் கைகளை சுத்தம் செய்து கொள்ள கண்டக்டர்கள் கிருமி நாசினி மருந்து கொடுத்தனர்.

கோவையில் பள்ளி, கல்லூரிகள் தவிர தொழிற்சாலைகள், வர்த்தகம், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் திறக்கப் பட்டு உள்ளன. ஆனாலும் பஸ்களில் போதிய பயணிகள் இல்லை. கொரோனாவுக்கு முந்திய காலகட்டத்தில் காந்திபுரம் பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும். ஆனால் தற்போது காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கு கோவையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதே காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பாக கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. பஸ் போன்ற பொதுவாகனத்தில் பயணம் செய்தால் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல தங்களது சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக பெரும்பாலான பஸ்களில் மிக குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தனர். இதனால் பஸ் கட்டண வசூலும் வெகுவாக குறைந்தது. இதையடுத்து நேற்று கோவை கோட்டத்தில் 202 பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. மொத்தம் 598 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இது குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை கோட்டத்தில் இயக்கப்பட்ட பஸ்களில் போதிய பயணிகள் இல்லை. இதன் காரணமாக பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு நேற்று கோவையில் 257 பஸ்களும், திருப்பூரில் 111 பஸ்களும், நீலகிரியில் 104 பஸ்களும், ஈரோட்டில் 126 பஸ்களும் என மொத்தம் 598 பஸ்கள் இயக்கப்பட்டன.

கோவை கோட்டத்தில் வழக்கமான நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி வருவாய் கிடைக்கும். ஆனால் நேற்று முன்தினம் ரூ.26 லட்சம் மட்டும் வருவாயாக கிடைத்துள்ளது. இதில் கோவையில் ரூ.14 லட்சம் மட்டும் வருவாயாக கிடைத்தது. இனி வரும் நாட்களில் பயணிகள் வருகையை பொறுத்து அரசு பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகளே பயணம் செய்தனர். இதனால் சிங்காநல்லூர், காந்திபுரம் நகர பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையம் உள்ளிட்ட பஸ் நிலையங்கள் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story