குமரியில் கொரோனா நோயாளிகள் சுய தனிமையில் இருப்பது எப்படி? - வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கலெக்டர் விளக்கம்


குமரியில் கொரோனா நோயாளிகள் சுய தனிமையில் இருப்பது எப்படி? - வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கலெக்டர் விளக்கம்
x
தினத்தந்தி 3 Sep 2020 6:35 AM GMT (Updated: 3 Sep 2020 6:35 AM GMT)

கொரோனா நோயாளிகள் வீட்டு சுய தனிமைப்படுத்தலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில், 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவிட் கேர் சென்டர் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 1-ந் தேதிக்கு பிறகு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில் சுய தனிமையில் இருப்பதற்கு தமிழக அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதாவது மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் மருத்துவக்குழு வாட்ஸ்-அப் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் நோயாளியின் உடல் நலம் குறித்த கேள்விகளுக்கு சுய தனிமையில் இருப்பவர் பதிலளிக்க வேண்டும். கை கழுவுதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் ஆகியவற்றை பின்பற்றுவது அவசியம்.

வீட்டு சுய தனிமையில் இருக்கும் போது காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் போன்ற எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவக் குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும். நோயாளியோடு இருக்கும் நபர்கள் வீட்டு சுய தனிமையில் இருக்க வேண்டும். வீட்டு சுய தனிமையில் இருக்கும் நோயாளி உபயோகப்படுத்த கழிவறையுடன் கூடிய அறை வீட்டில் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் உள்ள மற்ற நபர்களுக்கும் கழிவறை வசதியுடன் கூடிய தனி அறைகள் இருக்க வேண்டும். நோயாளியை கவனித்துக்கொள்ளவும், அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி வரவும் நோய் தொற்று இல்லாத 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான ஒரு நபர் இருக்க வேண்டும். இறுதியாக நோயாளி வீட்டு சுயதனிமை பற்றிய உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும். அதே சமயத்தில், வீட்டு சுய தனிமைப்படுத்துதல் மருத்துவக்குழுவின் நேரடி பரிசோதனைக்குப் பின்னர் நோயாளியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டே அனுமதிக்கப்படும். அறிகுறிகள் அற்ற நோயாளிகள் மட்டுமே மேற்கண்ட பரிசோதனைகளுக்குப் பிறகு வீட்டு சுயதனிமைக்கு அனுமதிக்கப்படுவர்.

மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு விரிவான பரிசோதனைக்குப் பின்னரே வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர்கள் வீட்டு சுய தனிமையில் இருந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story