தரங்கம்பாடி பகுதியில், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஒலி-ஒளி அமைப்பாளர்கள் - நிதி உதவி கேட்டு தாசில்தாரிடம் மனு


தரங்கம்பாடி பகுதியில், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஒலி-ஒளி அமைப்பாளர்கள் - நிதி உதவி கேட்டு தாசில்தாரிடம் மனு
x
தினத்தந்தி 3 Sep 2020 10:30 PM GMT (Updated: 3 Sep 2020 11:31 PM GMT)

தரங்கம்பாடி பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஒலி-ஒளி அமைப்பாளர்கள், நிதிஉதவி கேட்டு தரங்கம்பாடி தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

பொறையாறு, 

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஒலி-ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில், தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு தாசில்தார் கோமதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கால் ஒலி, ஒளி தொழில் செய்ய முடியாமல் தவிப்பதாகவும், மற்ற தொழில்கள் செய்ய அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, தங்களையும் அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த கொரோனா கால நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும். கடைக்கு வாடகை செலுத்த முடியாமல் ஒலி பெருக்கிகளை வீடுகளில் வைத்து இருந்தால் மின்சார துறையினர் அபராதம் கட்ட கூறுகின்றனர். கிராம கோவில்களில் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட சுப விழாக்களுக்கு சென்று ஒலி பெருக்கி அமைத்தால் போலீசார் அனுமதி மறுக்கின்றனர். எலக்ட்ரானிக் பொருட் களை தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருப்பதால் பழுதடைந்து போகும் நிலை ஏற்பட்டு விடும்.

அன்றாட உணவிற்கே கடும் அவதிப்படுவதாகவும் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் இழந்த நிலையில், மாற்று தொழில் செய்ய வழிவகையில்லாத நிலையில் நாங்கள் மட்டும் அல்ல, எங்களை போன்று எங்களுடன் உதவியாளர்களாக பணிபுரிந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே எங்களுக்கு அரசு நிதிஉதவி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அப்போது சங்கத்தின் தலைவர் சந்திரசேகர், செயலாளர் சந்தானசாமி, பொருளாளர் கனகராஜ், துணை தலைவர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உதவியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story