கன்னட திரைஉலகம் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு இயக்குனர் இந்திரஜித் லங்கேசிடம் 2-வது முறையாக விசாரணை ‘எனக்கு கிடைத்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தேன்’ என பேட்டி


கன்னட திரைஉலகம் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு இயக்குனர் இந்திரஜித் லங்கேசிடம் 2-வது முறையாக விசாரணை ‘எனக்கு கிடைத்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தேன்’ என பேட்டி
x
தினத்தந்தி 4 Sept 2020 6:08 AM IST (Updated: 4 Sept 2020 6:08 AM IST)
t-max-icont-min-icon

கன்னட திரைஉலகம் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு கூறிய இயக்குனர் இந்திரஜித் லங்கேசிடம் 2-வது முறையாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். எனக்கு கிடைத்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கன்னட திரைஉலகில் சில நடிகர், நடிகைகள், இளம் இசையமைப்பாளர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது குறித்த தகவல்களை தெரிவிக்கும்படியும், அதற்காக விசாரணைக்கு ஆஜராகும்படியும் இந்திரஜித் லங்கேசுக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். இதற்காக அவர் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகி தான் கூறிய குற்றச்சாட்டு குறித்து போலீசாரிடம் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால் அவர், நடிகர், நடிகைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது குறித்த எந்த ஆதாரங்களையும் போலீசாரிடம் அளிக்கவில்லை. இந்த நிலையில், 2-வது முறையாக விசாரணைக்கு ஆஜராகும்படி இந்திரஜித் லங்கேசுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பினார்கள். இதையடுத்து, 2-வது முறையாக நேற்று பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 45 நிமிடங்கள் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்று கொண்டனர். பின்னர் இந்திரஜித் லங்கேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நான் கன்னட திரைஉலகில் இயக்குனராக இருந்து வருகிறேன். இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளேன். நானும் கன்னட திரைஉலகத்தை சேர்ந்தவன் தான். திரைஉலகத்தின் நன்மைக்காக தான் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் விவகாரத்தை பகிரங்கப்படுத்தினேன். எனக்கு கிடைத்த தகவல்களை போலீசாரிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதால், போலீசாரிடம் கூறிய தகவல்களை உங்கள் (நிருபர்கள்) முன்னிலையில் தெரிவிக்க இயலாது. கன்னட திரைஉலகம் இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வரவேண்டும்.

போதைப்பொருட்கள் பயன்படுத்துவது அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். நான் கூறிய தகவல்களின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்தந்த நடிகர், நடிகைகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளது என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளேன். மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் மீது நம்பிக்கை உள்ளது. போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் அதில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம் குறித்து நான் கூறிய கருத்துகள் தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story