கொரோனா பரவலால் முன்எச்சரிக்கை நடவடிக்கை: எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு எளிமையாக நடக்கும் - மைசூரு தசரா கர்நாடக அரசு உத்தரவு


கொரோனா பரவலால் முன்எச்சரிக்கை நடவடிக்கை: எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு எளிமையாக நடக்கும் - மைசூரு தசரா கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 4 Sept 2020 6:25 AM IST (Updated: 4 Sept 2020 6:25 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த கர்நாடக முடிவு செய்துள்ளது. அதே வேளையில் இந்த விழாவை கொண்டாட முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தின் அரண்மனை நகரம் என்று மைசூரு அழைக்கப்படுகிறது.
மொழி வாரி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு முன்பு கர்நாடகம், ஒருங்கிணைந்த மைசூரு மாகாணமாக இருந்தது. விஜயநகர பேரரசர்களின் தலைநகராக விளங்கிய மைசூருவில் கடந்த 15-ம் நூற்றாண்டில் இருந்து தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது கன்னடத்தில் நாடஹப்பா (கர்நாடகத்தின் பண்டிகை) என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூரு சாமுண்டிமலையில் குடிகொண்டுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷாசூரனை வதம் செய்த கொண்டாட்டத்தை சித்தரிக்கும் வகையில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு மைசூருவில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மைசூரு மாவட்டம் மகிசூர் என்று அழைக்கப்பட்டு வந்ததுடன் அது மருவி தற்போது மைசூரு என்று மாறியுள்ளதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த விழா 10 நாட்கள் கர்நாடக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம், விஜயதசமி அன்று நடைபெறும். இதில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் யானைகள் புடை சூழ இந்த ஊர்வலம் நடக்கும். மேலும் பல்வேறு கலைக்குழுக்கள், மாவட்டங்களின் வாரியாக அணிவகுப்பு வாகனங்கள், குதிரைப்படை, போலீஸ் படை உள்ளிட்டவை அணிவகுத்து செல்லும். இந்த ஊர்வலம் அரண்மனை மைதானத்தில் இருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்னிமண்டபத்தில் நிறைவடையும். அந்த பன்னிமண்டபத்தில் தீப்பந்த விளையாட்டுகளும், வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்படும்.

மேலும் தசரா விழாவையொட்டி 10 நாட்களும் மைசூரு அரண்மனையில் சம்பிரதாய முறைப்படி மைசூரு மன்னர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துவார். அப்போது மக்களிடம் குறைகளை கேட்டறிவார். அத்துடன் மைசூரு மன்னர்கள் பயன்படுத்திய ஆயுதங்களுக்கு பூஜை நடத்தப்படும். மேலும் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சிகள், மலர் கண்காட்சி, பொருட் காட்சி, நாடகம், திரைப்பட விழா, விவசாய தசரா, இளைஞர் தசரா, பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும். இந்த தசரா விழாவை கர்நாடகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநில மக்களும், வெளிநாட்டினரும் கண்டு ரசிக்க வருவார்கள்.

இதனால் மைசூரு தசரா விழா உலகப்புகழ்பெற்று விளங்குகிறது. இந்த ஆண்டு அடுத்த மாதம் அதாவது அக்டோபரில் நவராத்திரியை முன்னிட்டு தசரா விழா கொண்டாடப்பட உள்ளது. அதாவது அக்டோபர் மாதம் 17-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை கொண்டாடப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழா கொண்டாடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் தசரா விழாவில் லட்சக்கணக்கானோர் குவிவார்கள். இதனால் தசரா விழாவை கொண்டாடவா? இல்லை ரத்து செய்யலாமா? என கர்நாடக அரசு தீவிர ஆலோசனையில் இருந்தது. ஆனால் பாரம்பரிய விழா என்பதால் மைசூரு தசரா விழாவை இந்த ஆண்டு மிக எளிமையாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தசரா விழா நிகழ்ச்சிகளில் மக்கள் ஒரு இடத்தில் அதிக எண்ணிக்கையில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் முன்எச்சரிக்கை நடவடிக்கை யாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தசரா விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவில் துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், லட்சுமண் சவதி, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி, மைசூரு மகாராணி பிரமோதாதேவி, மைசூரு மாநகராட்சி மேயர், மைசூரு மாவட்ட பஞ்சாயத்து தலைவி, எம்.பி.க்கள் சீனிவாசபிரசாத், பிரதாப்சிம்ஹா, சுமலதா மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என மொத்தம் 54 பேர் இடம் பெற்றுள்ளனர். அதே போல் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் தலைமையில் செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் ஆலோசித்து தசரா விழாவை எப்படி கொண்டாடுவது?, அதாவது என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்துவது?, எந்தந்த இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்குவது? என்பது பற்றி விவாதித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர். வழக்கமாக தசரா விழா தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஜம்பு சவாரியில் பங்கேற்கும் கும்கி யானைகள் முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். ஆனால் இதுவரை கும்கி யானைகள் மைசூருவுக்கு அழைத்துவரப்படவில்லை. இதனால் தசரா விழா ஏற்பாடுகள் மந்தமாக நடைபெற்று வந்தது. தற்போது மைசூரு தசரா விழாவை நடத்த ஏதுவாக அரசு, எடியூரப்பா தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளதால், விழாவுக்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன.

Next Story