சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று நடவடிக்கை: அடுத்த மாதத்துக்குள் நடத்த ஏற்பாடு ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு - கவர்னர் ஒப்புதல் அளித்தார்


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று நடவடிக்கை: அடுத்த மாதத்துக்குள் நடத்த ஏற்பாடு ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு - கவர்னர் ஒப்புதல் அளித்தார்
x
தினத்தந்தி 4 Sept 2020 6:50 AM IST (Updated: 4 Sept 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஒப்புதல் அளித்தார்.

மும்பை,

கொரோனா பிரச்சினை காரணமாக பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களையும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க மராட்டிய அரசு முடிவு செய்தது.

இதே முடிவை மேலும் சில மாநிலங்களும் எடுத்தன. ஆனால் வருகிற 30-ந் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில், தேர்வுகள் நடத்தாமல் இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதே வேளையில் கொரோனா பரவல் இருப்பதால், தேர்வுகளை நடத்த கூடுதல் காலஅவகாசத்தை பல்கலைக்கழக மானிய குழுவிடம் கேட்டு ஒப்புதல் பெறலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று தேர்வு நடத்தப்படும் என்று மராட்டிய அரசு அறிவித்தது. தேர்வை நடத்துவது குறித்து நேற்று முன்தினம் மந்திரி உதய் சமாந்த் ராஜ்பவனுக்கு சென்று அங்கு கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு குறித்து ஆலோசித்தார்.

இந்த நிலையில் நேற்று மாநிலத்தில் உள்ள 13 பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில உயர்கல்வி மந்திரி உதய் சாமந்த், இணை மந்திரி பிரஜாக்த் தன்புரே, கூடுதல் தலைமை செயலாளர் ராஜூவ் ஜலோடா ஆகியோரும் உடன் இருந்தனர்.

பின்னர் தேர்வு குறித்து நேற்று மந்திரி உதய் சாமந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார். இதன் மூலம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுத முடியும்.

இந்த மாத இறுதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு கூறி உள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருதி தேர்வை நடத்த அடுத்த மாதம் (அக்டோபர்) இறுதி வரை காலஅவகாசம் வழங்கும்படி பல்கலைக்கழக மானிய குழுவுக்கு வேண்டுகோள் விடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்வியாண்டு பாதிக்காத வகையில் அக்டோபர் இறுதிக்குள் தேர்வை நடத்தி பரீட்சை தாள்களை திருத்தி, முடிவுகளும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

செய்முறை தேர்வுகளை வருகிற 15-ந் தேதி முதல் தொடங்கவும் திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story