தனியார் பஸ்களை இயக்க உரிமையாளர்கள் மறுப்பு


தனியார் பஸ்களை இயக்க உரிமையாளர்கள் மறுப்பு
x
தினத்தந்தி 4 Sept 2020 7:01 AM IST (Updated: 4 Sept 2020 7:01 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தனியார் பஸ்களை இயக்க உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.

புதுச்சேரி,

ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்க கலெக்டர் அருண் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அரசு பஸ்கள் மட்டும் ஒரு சில இயங்கும் நிலையில் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப் படவில்லை.

சமூக இடைவெளி என்ற பெயரில் பஸ் ஒன்றுக்கு 25 பயணிகளை ஏற்றி செல்வது என்பது பெருத்த நஷ்டத்துக்கு வழிவகுக்கும் என்பதால் அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் தமிழக பகுதிகளுக்குள் பஸ்களை இயக்க அனுமதி இல்லை என்பதாலும் போதிய வருமானம் கிடைக்காது என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்தநிலையில் தனியார் பஸ் உரிமையாளர்களுடன் போக்குவரத்துத்துறை ஆணையர் சிவக்குமார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசு பஸ்களை இயக்க அனுமதி அளித்துள்ள நிலையில் பஸ்களை ஓட்டுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி பஸ்களை இயக்கமாட்டோம் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாரதி கண்ணன் கூறியதாவது:-

ஊரடங்கினை தொடர்ந்து கடந்த 5 மாதத்துக்கும் மேலாக தனியார் பஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் பஸ்கள் ஓடாத காலத்துக்கும் சேர்த்து வரியை செலுத்த சொல்கின்றனர். அதுமட்டுமின்றி சமூக இடைவெளி என்ற பெயரில் 25 பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் முண்டியடித்து பஸ்சில் ஏறும் பயணிகளை கட்டுப்படுத்துவது என்பது சிரமமானது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பஸ்சில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் பயணிகளை ஏற்ற அனுமதிக்கவேண்டும்.

தற்போது டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது அதற்கு மானியம் வழங்கவேண்டும். 5 மாதங்களுக்கும் மேலாக பஸ்கள் இயக்கப்படாததால் அவற்றை பழுதுநீக்கி ஓட்டவே பெருந்தொகை வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் பஸ்களை இப்போதைக்கு இயக்க முடியாது.

இவ்வாறு பாரதி கண்ணன் கூறினார்.

Next Story