சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்


சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2020 7:09 AM IST (Updated: 4 Sept 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரிக்கு செல்பவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளுவது இல்லை என்றும், பாதிப்பினை குறைத்துகாட்ட பரிசோதனையை குறைத்துள்ளதாகவும் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேற்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அலுவலக வாயில் கதவினை இழுத்துப்பூட்டி வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் குறித்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் கடந்த வாரம் வரை 1,800 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நாள்தோறும் 3 ஆயிரம் பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்போவதாக முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார். ஆனால் தொற்று பரிசோதனையை 1,300 ஆக குறைத்துவிட்டனர். சோதனைகளை அதிகப்படுத்த வேண்டாம் என்று இயக்குனர் உத்தரவிட்டதாக தெரிகிறது. சோதனைகளை குறைக்கவேண்டிய அவசியம் என்ன?

சோதனையை குறைக்க உத்தரவிட்டது யார்? நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை அரசு ஏன் உணரவில்லை? படுக்கை வசதியை அதிகப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை தூங்கிக்கொண்டிருக்கிறது. வீட்டில் இருந்து சிகிச்சை பெறுபவர்களை தனிமைப்படுத்த அரசிடம் கட்டிட வசதி இருந்தும் அதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதனால் இறப்பு விகிதம் 1.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ.க்களுடன் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரது சமரசத்தை எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அழைப்பு விடுத்தார்.

அதன்பின் எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவை கைவிட்டு சட்டசபைக்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் கூடுதல் தொற்று பரிசோதனைகள் நடத்த முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார். மேலும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story