உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலப்பதாக புகார்: வெல்லம் தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து வெல்லம் தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு சாகுபடி நடக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் வெல்லம் தயாரிப்பு தொழில் நடக்கிறது. சிலர் வெல்லம் தயாரிக்கும் போது அதில் செயற்கை நிறம் மற்றும் ரசாயனம் கலப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள வெல்லம் தயாரிப்பு கூடங்கள், வெல்லம் விற்பனை மண்டிகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்பேரில், போடி அருகே அணைக்கரைப்பட்டி, தேனி அருகே பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிப்பு கூடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நவநீதன் தலைமையில் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். கரும்புச் சாறு எடுத்தல், அவற்றை வெல்லப் பாகாக காய்ச்சுதல், வெல்லம் உருட்டுதல் போன்ற பணிகளை பார்வையிட்டனர். அவற்றில் சேர்க் கப்படும் ரசாயனம், செயற்கை நிறமிகள் குறித்து ஆய்வு செய்தனர். அங்கிருந்து வெல்லம் மாதிரி சேகரித்தனர்.
மேலும், பூதிப்புரத்தில் உள்ள வெல்லம் விற்பனை மண்டியில் விற்பனைக்காக மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த வெல்லத்தை ஆய்வு செய்தனர். அங்கும் வெல்லம் மாதிரி சேகரித்தனர். இதுதொடர்பாக மண்டி உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
இந்த ஆய்வில் தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ், போடி உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகையில், வெல்லம் தயாரிக்கும் போது சிலர் ‘சோடியம் ஹைட்ரோ சல்பைட்’ என்ற ரசாயனத்தை அதிக அளவில் கலப்பதால் கவர்ச்சிகரமான நிறம் கிடைக்கும். ஆனால், இத்தகைய வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது வயிறு, கண், சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இவை எந்த அளவுக்கு சேர்க்கப்பட்டுள்ளது என்பது மாதிரிகளை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்தால் தான் தெரியவரும். எனவே, சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனை முடிவு வந்த பின்னர் சட்டரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
Related Tags :
Next Story