நீலகிரி மாவட்டத்தில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நிகழ்ச்சி நடத்த கூடாது - கலெக்டர் அறிவுரை


நீலகிரி மாவட்டத்தில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நிகழ்ச்சி நடத்த கூடாது - கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 4 Sept 2020 11:54 AM IST (Updated: 4 Sept 2020 11:54 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நிகழ்ச்சி நடத்த கூடாது என்று கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கல்லக்கொரை, இத்தலார் ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா பரவலை தடுக்க தினமும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறதா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்களுக்கு ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறதா சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முன்வர வேண்டும். தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் முதல், இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் தாமாக முன்வந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக திருமணம், துக்க நிகழ்ச்சிகளால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது.

அரசு தெரிவித்த அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை மட்டுமல்லாமல் தங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோயினை கண்டறிந்தால் அரசு தெரிவித்த வழிமுறையின்படி சிகிச்சை அளித்து குணமடைய செய்ய முடியும். பொதுமக்களுக்கு கொரோனா குறித்து அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது சப்-கலெக்டர் மோனிகா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, குந்தா தாசில்தார் மகேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், நடுஹட்டி, நெடுகுளா பகுதிகள் மற்றும் நடுஹட்டி பகுதியில் ஒப்பளிக்கப்பட்ட வருவாய் நிதி தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.34.95 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சாலை, குஞ்சப்பனையில் பாரத பிரதமர் கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 62 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அரவேனு முதல் அடுபெட்டு வரை சாலை ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதேபோல நெடுகுளாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.78 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நில மேம்பாடு பணியை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஜெயபால் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story