கர்நாடக அரசு சார்பில் ரூ.1,800 கோடியில் அதிநவீன ஆம்புலன்ஸ் சேவை திட்டம்
கர்நாடக அரசு சார்பில் ரூ.1,800 கோடி செலவில் அதிநவீன ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்த பணிகளை கண்காணிக்க ஐகோர்ட்டு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அரசு ரூ.1,800 கோடியில் அதிநவீன ஆம்புலன்ஸ் வாகன சேவை திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது. இதற்காக டெண்டர் விட அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் திருத்தம் செய்து, டெண்டர் விடாமல் அவசரமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை கொள்முதல் செய்ய அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தது.
இந்த மனு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஒகா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அதிநவீன ஆம்புலன்ஸ் வாகனங்களை அவசர தேவை கருதி உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாது. ஆனால் இந்த ஆம்புலன்ஸ்கள் வாங்க அரசு மேற்கொள்ளும் கொள்முதல் பணிகளின் முன்னேற்றத்தை கோர்ட்டு கண்காணிக்கும்“ என்றனர்.
முன்னதாக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “ரூ.1,800 கோடியில் அதிநவீன ஆம்புலன்ஸ் வாகனங்கள் 7 ஆண்டுகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை கொண்ட நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டெண்டர் இல்லாமல் அந்த வாகனங்களை வாங்க விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை. இந்த திட்டத்திற்கான வரைவு திட்டத்திற்கு மந்திரிசபை விரைவில் அனுமதி வழங்கும். டெண்டர் பணிகளை நிறைவு செய்ய குறைந்தது 5 மாதங்கள் தேவைப்படுகிறது” என்றார்.
Related Tags :
Next Story