கடலூர் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


கடலூர் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 4 Sept 2020 6:26 PM IST (Updated: 4 Sept 2020 6:26 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கடலூர்,

கடலூர் பெருநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில் தெரு, சீதாராம்நகர், மசூதிதெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மை பணி, குப்பைகளை அகற்றும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக ஜல்லி மற்றும் மணல் கொட்டப்பட்டு இருந்தது. மேலும் சாலையை ஆக்கிரமித்து கொட்டகையும் போடப்பட்டு இருந்தது. இதை பார்த்த கலெக்டர் அவற்றை உடனடியாக அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல் சீதாராம்நகர் மெயின்ரோட்டின் ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக எம்.சான்டு, ஜல்லி போன்றவை குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த கலெக்டர், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகள் மற்றும் தெருக்களில் கட்டுமானப் பொருட்கள் போடப்பட்டு இருந்தாலும், ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவற்றை உடனடியாக அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இது பற்றி கலெக்டர் சந்திர சேகர் சாகமூரி கூறியதாவது:-

கடலூர் பெருநகராட்சி அனைத்து பகுதிகளிலும் நோய் தொற்று பரவா வண்ணம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பது தொடர்பாக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவக்குழுவினர் வீடு, வீடாக சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளதா? என்று பரிசோதனை செய்து வருகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசங்கள் அணிவது, சோப்பு போட்டு கை கழுவுவது போன்ற விழிப்புணர்வுகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும். வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்க வரும் நகராட்சி பணியாளர்களிடம் குப்பைகளை வழங்கவும், கண்ட இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்கவும் வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, தாசில்தார் செல்வகுமார், நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story