தாராபுரத்தில் மகளுடன் மாயமான சினிமா நடிகை வீடு திரும்பினார்


தாராபுரத்தில் மகளுடன் மாயமான சினிமா நடிகை வீடு திரும்பினார்
x
தினத்தந்தி 4 Sept 2020 7:10 PM IST (Updated: 4 Sept 2020 7:10 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் மகளுடன் மாயமான சினிமா நடிகை வீடு திரும்பினார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

தாராபுரம்,

கடந்த 1987-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-.ந் தேதி வெளியான படம் சின்னபூவே மெல்லபேசு. இந்த படத்தில் பிரபு மற்றும் ராம்கி, சுதா சந்திரன், சபிதா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். படத்தின் கதாநாயகியாக நர்மதா நடித்து இருந்தார்.

இந்த படம் வெளியான பிறகு நர்மதா பிரபலமானார். ஆனால் அதன்பிறகு அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை. அதன்பின்னர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு தாராபுரத்தில் குடியிருந்து வந்தார்.

இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற நர்மதா அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய கணவர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார். உறவினர் வீடுகளுக்கு சென்று உள்ளார்களா? என்றும் விசாரித்தார். ஆனால் உறவினர்களின் வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை என்று தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய கணவர் தாராபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நர்மதாவையும், அவருடைய மகளையும் தேடி வந்தனர். மகளுடன் நடிகை காணாமல் போன சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மாயமான நர்மதா தனது மகளுடன் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார்.

Next Story