இலுப்பூர், விராலிமலையில் சாலை விபத்துகள்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி


இலுப்பூர், விராலிமலையில் சாலை விபத்துகள்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 4 Sept 2020 9:50 PM IST (Updated: 4 Sept 2020 9:50 PM IST)
t-max-icont-min-icon

இலுப்பூர், விராலிமலையில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலியாகினர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள முருகக்கோன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் வெள்ளைச்சாமி (வயது29). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், தனது திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்தார். இவருக்கு கடந்த மாதம் 24-ந் தேதிதான் திருமணம் நடைபெற்றது. இவர் நேற்று காலை அன்னவாசல் அருகே பரம்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இந்தநிலையில், மந்திராம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட மின் பழுதை சரிசெய்வதற்காக இலுப்பூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றும் அன்னவாசலை சேர்ந்த அஜய்கோஸ்(48) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி என்னும் இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே, அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த வெள்ளைச்சாமிக்கு திருமணமாகி 10 நாட்களே ஆவதால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். இதேபோல, விபத்தில் உயரிழந்த மின் வாரிய ஊழியர் அஜய்கோசின் 2-வது மகளுக்கு அடுத்தவாரம் திருமணம் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை விபத்தில் இறந்த தகவல் அறிந்ததும் அவரது மகள் மயங்கி விழுந்தார்.

விராலிமலை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் ஏழுமலை. விசேஷங்களுக்கு பந்தல் மற்றும் மைக் செட் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று துவரங்குறிச்சி அருகே ஒரு திருமண விழாவிற்காக அமைக்கப்பட்ட பந்தல் மற்றும் பொருட்களை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விராலூரை சேர்ந்த முருகன் (60) மற்றும் விராலிமலை சண்முகம் நகரை சேர்ந்த மற்றொரு முருகன் (50) ஆகியோருடன் திரும்பி வந்து கொண்டிருந்தார். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது சரக்கு ஆட்டோவின் வலதுபக்க பின்புற டயர் திடீரென வெடித்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியில் முருகனும், மருத்துவமனையில் மற்றொரு முருகனும் இறந்தனர். ஏழுமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story