தனியார் நிதிநிறுவனத்தினர் அபராத வட்டி கேட்பதாக புகார்: பெட்ரோலுடன் தீக்குளிக்க வந்த ஊராட்சி தலைவியின் கணவர் காட்டூரில் பரபரப்பு


தனியார் நிதிநிறுவனத்தினர் அபராத வட்டி கேட்பதாக புகார்: பெட்ரோலுடன் தீக்குளிக்க வந்த ஊராட்சி தலைவியின் கணவர் காட்டூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Sept 2020 9:54 PM IST (Updated: 4 Sept 2020 9:54 PM IST)
t-max-icont-min-icon

காட்டூரில் தனியார் நிதிநிறுவனத்தினர் நகைக்கடனுக்கு அபராத வட்டி கேட்பதாக கூறி பெட்ரோலுடன் தீக்குளிக்க வந்த ஊராட்சி தலைவியின் கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர்,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சியின் தலைவராக இருப்பவர் ஸ்ரீநிதி. இவருடைய கணவர் சதீஷ்குமார். இவர்கள் இருவரும், கடந்த ஜனவரி மாதம் காட்டூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 165 கிராம் நகையை ரூ.4½ லட்சத்துக்கு அடகு வைத்து பணம் பெற்றனர்.

இதற்கிடையே ஊரடங்கு காலத்தில் வங்கிகள், நிதிநிறுவனங்களில் வாங்கிய கடன்களுக்கான வட்டியை கட்ட அவகாசம் அளித்தது. இதனால் அவர்கள் வட்டியை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் அவர்கள் வாங்கிய கடன் தொகைக்கான வட்டியுடன், தவறிய வட்டியையும் சேர்த்து செலுத்தும்படி ஊராட்சி தலைவிக்கும், அவருடைய கணவருக்கும் அந்த நிதிநிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த அவர்கள், அந்த நிறுவனத்துக்கு சென்று நகைக்கடனுக்கான வட்டி குறித்த பட்டியலை (ஸ்டேட்மெண்ட்) கேட்டுள்ளனர். ஆனால், அதை அந்த நிறுவன ஊழியர்கள் கொடுக்க மறுத்ததுடன், வட்டி மற்றும் அபராத வட்டியை செலுத்தும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஊராட்சி தலைவியின் கணவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு நிதிநிறுவனத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் சென்று, தங்களுக்கு உரிய நியாயம் வேண்டும். இல்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க போவதாக கூறினார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஊராட்சி தலைவியின் கணவர் கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும், போலீஸ்நிலையத்துக்கு வரும்படி அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story