மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனக்கூறிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஆளும் கட்சியினர் கண்டனம்


மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனக்கூறிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஆளும் கட்சியினர் கண்டனம்
x
தினத்தந்தி 5 Sept 2020 12:27 AM IST (Updated: 5 Sept 2020 12:27 AM IST)
t-max-icont-min-icon

மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஆளும் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

மும்பை,

இந்தி நடிகை கங்கனா ரணாவத், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பாலிவுட் திரையுலகம் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் அவர் தற்போது மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறியுள்ளார். மேலும் மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கங்கனாவின் இந்த கருத்துக்கு சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த விவகாரம் குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘106 பேரின் உயிா் தியாகத்தால் இன்று மும்பை மராட்டியத்துடன் உள்ளது. ஆனால் இந்த நகரத்துக்கு எதையும் செய்யாதவர்கள் அவதூறு பரப்புகின்றனர். மும்பை போலீசார், மாநில அரசு மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மும்பை போலீசாரின் உறுதியை பாதிக்கும்’’ என கூறியுள்ளார்.

மேலும் அவர், மராட்டியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் இந்த நடிகைக்கு ஆதரவு அளிக்கும் கட்சியினர் தேர்தலில் மாநில மக்களிடம் ஓட்டு கேட்க தகுதி அற்றவர்கள் எனவும் பா.ஜனதாவை மறைமுகமாக சாடினார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

நடிகை கங்கனா மாநில அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பா.ஜனதாவுடன் சோ்ந்து இதுபோன்ற கருத்துகளை கூறுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மராட்டியம் சிவாஜி மன்னரின் நிலம். மறைமுகமாக மராட்டியத்தை அவனமானப்படுத்தும் நடவடிக்கையில் பா.ஜனதா ஈடுபட்டு வருகிறது. இதுவரை எந்த பா.ஜனதா தலைவரும் கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நடிகைக்கு ஆதரவு அளித்ததற்காக தேவேந்திர பட்னாவிஸ், மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ராம் கதம் எம்.எல்.ஏ. ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.

இதேபோல மாநில உள்துறை மந்திரி மும்பை, மராட்டியம் பாதுகாப்பில்லை என உணருபவர்களுக்கு இங்கு வசிக்க உரிமையில்லை என கூறியுள்ளார். மேலும் நடிகை கங்கனாவின் கருத்து அபத்தமானது எனவும் அவர் தெரிவித்தார்.

பா.ஜனதா மறுப்பு

எனினும் ஆளும் கட்சியினரின் குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்து உள்ளது. கங்கனாவின் சா்ச்சைக்குரிய கருத்துகளை பா.ஜனதா ஆதரிக்கவில்லை என ராம் கதம் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். இதேபோல மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார், ‘‘கங்கனா மும்பைக்கும், மும்பைக்காரர்களுக்கும், மராட்டியர்களுக்கும் பாடம் கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம். பா.ஜனதா கங்கனாவுடன் சேர்ந்து எதையும் செய்யவில்லை. அவரின் கருத்துகளுடன் எங்களை தொடர்புபடுத்த வேண்டாம்’’ என்றார்.

இதற்கிடையே மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறிய நடிகை கங்கனாவை கண்டித்து அவரது உருவ படத்துக்கு கருப்பு மை பூசியும், செருப்பு மாலை அணிவித்தும் தானேயில் சிவசேனா மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story