நடிகை ரியாவின் சகோதரர், சுஷாந்த் சிங் உதவியாளர் கைது போதைப்பொருள் வழக்கில் அதிரடி


நடிகை ரியாவின் சகோதரர், சுஷாந்த் சிங் உதவியாளர் கைது போதைப்பொருள் வழக்கில் அதிரடி
x
தினத்தந்தி 4 Sep 2020 7:08 PM GMT (Updated: 4 Sep 2020 7:08 PM GMT)

போதைப்பொருள் வழக்கில் அதிரடி நடவடிக்கையாக நடிகை ரியாவின் சகோதரர் மற்றும் நடிகர் சுஷாந்த் சிங்கின் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

முன்னதாக பணமோசடி தொடர்பாக நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் சோவிக் ஆகியோரிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், வழக்கு வேறு திசைக்கு மாறியது. அவர்களின் வாட்ஸ் அப் உரையாடல்கள் மூலம் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து என்.சி.பி. எனப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் வழக்கை கையில் எடுத்து விசாரிக்க தொடங்கினர்.

அதிரடி சோதனை

இதையடுத்து போதைப்பொருள் சப்ளை தொடர்பாக ஜாயித் விலாத்ரா மற்றும் அப்தேல் பாசித் பரிதார் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். மேலும் காசிம் இப்ராகிம் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கைதான அப்தேல் பாசித் பரிதார், நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் சோவிக்குடன் செல்போன் உரையாடலில் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக நேற்று காலை 6.30 மணி அளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மும்பை சாந்தாகுருசில் உள்ள சோவிக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வீட்டில் தான் நடிகை ரியாவும் வசித்து வருகிறார். சோதனையில் சில பெண் அதிகாரிகளும் இடம்பெற்று இருந்தனர்.

சுஷாந்த் சிங் உதவியாளர்

இதேபோல அந்தேரியில் உள்ள சுஷாந்த் சிங்கின் உதவியாளர் சாமுவேல் மிரண்டா வீட்டிலும் அதிரடி சோதனை நடந்தது. இவருக்கு போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்களின் போன் நம்பரை சோவிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இருவரது வீட்டிலும் சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வழக்குக்கு தேவையான கூடுதல் ஆதாரங்களை திரட்டுவதற்காக சோதனை நடந்துள்ளது. சோதனையின் போது சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன” என்றார்.

கைது

இதையடுத்து சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா ஆகிய இருவரையும் பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். தொடர் விசாரணைக்கு பிறகு இரவு 9 மணியளவில் சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா இருவரும் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவரையும் இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருப்பதாக தெரிகிறது.

போதைப்பொருள் பயன்படுத்தும் புகாரில் இந்தி திரையுலகம் சிக்கி இருப்பதாக ஏற்கனவே புகார் எழுந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story