தே.மு.தி.க. பிரமுகர் மீது வெடிகுண்டு வீச்சுக்கு பழிக்கு பழியாக தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


தே.மு.தி.க. பிரமுகர் மீது வெடிகுண்டு வீச்சுக்கு பழிக்கு பழியாக தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 5 Sept 2020 2:46 AM IST (Updated: 5 Sept 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாக்கத்தில் தே.மு.தி.க. பிரமுகர் மீது வெடிகுண்டு வீசியதற்கு பழிக்கு பழியாக தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 37). இவர், பரங்கிமலை ஒன்றிய தே.மு.தி.க. கட்சியின் துணை செயலாளராக உள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருள்(28) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வண்டி விடுவதில் ஏற்பட்ட தகராறில் அருளை, ராஜசேகர் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கு பழிவாங்க அருள் நேற்று முன்தினம் இரவு 5-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்று வீட்டின் அருகே நின்றிருந்த ராஜசேகர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கர ஆயுதங்களால் ராஜசேகரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராஜசேகரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

இது பற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி கொண்டு இருந்தனர். அதேநேரத்தில் வேங்கைவாசல் வீரபத்திரன் நகரில் உள்ள தி.மு.க. பிரமுகரும், வக்கீலுமான மனோநிதி வீட்டில் காரில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர். இதில் வீட்டின் முன்பக்கம் லேசான சேதம் அடைந்தது.

இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் தலைமையில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன், பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர்.

பழிக்கு பழியாக

விசாரணையில் தே.மு.தி.க. பிரமுகர் ராஜசேகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த ராஜசேகரின் உறவினர் ராஜேஷ்(23) பழிக்கு பழியாக தனது நண்பர்களுடன் சென்று அருளுக்கு உதவியாக தி.மு.க. பிரமுகர் மனோநிதி இருப்பதால் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றதாக நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் பெரும்பாக்கத்தை சேர்ந்த அருள், அவரது நண்பர்களான அருண்குமார்(27), திருவான்மியூரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(20), சோழிங்கநல்லூரை சேர்ந்த அரவிந்த்(20), பாலவாக்கத்தை சேர்ந்த ரோஜின்(21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடுத்தடுத்த சம்பவங்களால் பரபரப்பு

மேலும் தி.மு.க. பிரமுகர் மனோநிதி வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஓட்டேரியை சேர்ந்த கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.

பழிக்கு பழியாக அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் பெரும்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர். இருப்பினும் பெட்ரோல் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story