பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2020 5:02 AM IST (Updated: 5 Sept 2020 5:02 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி,

சீர்காழியில் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய துணை செயலாளர் நீதிசோழன், விவசாய சங்க செயலாளர் வரதராஜன், நிர்வாக குழு உறுப்பினர்கள் இளமதியன், ஜெயகுமார், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வீரராஜ் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். சம்பா சாகுபடி செய்வதற்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் இந்தியை தினிக்க கூடாது. ரெயில்வே, மின்சாரம், காப்பீடு, பெட்ரோலியம், நிலக்கரி, இரும்பு தாது, விமான நிலையங்கள் உள்ளிட்ட அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 2019-2020 ஆண்டிற்கு விவசாயிகளுக்கு வரவேண்டிய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். ஊரடங்கால் 5 மாதங்களாக வேலை வாய்ப்பு, வருமானத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா நோய் தொற்று நெருக்கடியிலும், உயிர் பயத்துடன் நாட்டு மக்களுக்கு உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதுடன், அவர்கள் பெற்றுள்ள வங்கி கடன், கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். நகர்புறத்தில் வேலையின்றி தவித்து வரும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கும் வகையில் புதிதாக நகர்புற வேலை உறுதியளிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

திருமருகல் பஸ் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாதர் சங்க அணி சார்பில் சரோஜா, ஒன்றிய பொருளாளர் சந்திரசேகரன், தொண்டர் படை தலைவர் லெனின் பாபு, திருமருகல் கிளை செயலாளர் இரணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

வேளாங்கண்ணி அருகே உள்ள கீழையூர் ஒன்றியம் வாழக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கீழையூர் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கண்ணதாசன், துரைசாமி, கிளை செயலாளர் சந்திரகாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story