என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
மதுரை,
திருச்சியை சேர்ந்த அசோகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல் மாதம் நடக்க வேண்டிய ஜே.இ.இ. தேர்வும், நீட் தேர்வும் செப்டம்பர் மாதம் நடக்கிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாக வருகிற 17-ந் தேதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழக கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், அவர்கள் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவுகளில் காலியிடம் ஏற்படும். அந்த காலியிடங்களை நிரப்புவது குறித்த வழிமுறைகள் பற்றி அரசு எந்த வழிகாட்டுதலையும் தெரிவிக்கவில்லை.
எனவே, காலியிடங்களை நிரப்புவதற்கான வழிகாட்டுதலை வெளியிடவும், அதுவரை தமிழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது காலியிடங்கள் ஏற்படுவது இயல்பு. இவற்றை அரசு எப்படி கையாள்கிறது என்பதை மனுதாரர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் கோர்ட்டை அணுகலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story