வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏ.சி.யில் காற்றுச்சீரமைப்பான் - அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கினர்


வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏ.சி.யில் காற்றுச்சீரமைப்பான் - அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கினர்
x
தினத்தந்தி 5 Sept 2020 4:15 AM IST (Updated: 5 Sept 2020 8:07 AM IST)
t-max-icont-min-icon

ஏ.சி.யில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் காற்றுச்சீரமைப்பானை அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

காரைக்குடி,

அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் அறிவியல் கருவி மையத்தின் இயக்குனர் சங்கரநாராயணன் மற்றும் தொழில் முனைவு புத்தாக்க மற்றும் வேலைவாய்ப்பு முனையத்தின் இயக்குனர் முனைவர் இளங்குமரன் ஆகியோர் வழிகாட்டுதலில் பயிற்றுனர்கள் அழகுராமன், ஜெயமுருகன் மற்றும் மாணவர்கள் பிரதீஷ், அங்கப்பன், பரணி, படிக்காசு, அழகிரி ஆகியோர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏர்கண்டிஷனரில் உபயோகப்படுத்தக்கூடிய புற ஊதா கதிர்கள் கொண்ட காற்றுச்சீரமைப்பானை உருவாக்கி உள்ளனர்.

இதனை நேரில் பார்வையிட்டு பாராட்டிய அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் கூறியதாவது:- உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு ஆய்வு முடிவுகளின்படி எச்சில், இருமல், தும்மலில் ஏற்படும் நீர் திவலைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் கொரோனா தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த முக கவசம் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்தப்படுவதுடன் குளிர்சாதன எந்திரங்களை பயன்படுத்தாமல் இருப்பதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்துகின்றன. இருப்பினும் நீண்ட கால உபயோகத்தில் குளிர்சாதன எந்திரங்களின் பயன்பாடு பல காரணங்களுக்காக தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

பாதுகாப்பான முறையில் குளிர்சாதன எந்திரங்களைப் பயன்படுத்த அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் உபகரணங்கள் மைய இயக்குனரின் வழிகாட்டுதலின் கீழ் தொழில் முனைவு, புத்தாக்க மற்றும் வேலைவாய்ப்பு முனையத்தின் மாணவர்கள் மற்றும் பயிற்றுனர்கள் அடங்கிய குழு இந்த புதுமையான மற்றும் குறைந்த செலவிலான புற ஊதா சி அடிப்படையிலான காற்றுச்சீரமைப்பானை உருவாக்கி உள்ளனர். இந்த கருவியை வழக்கமான குளிர்சாதன எந்திரங்களில் எளிதாக நிறுவ முடியும். கிருமி நாசினி நோக்கங்களுக்காக புற ஊதா சி கதிர்வீச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. புற ஊதா சி கதிர்வீச்சு மூலம் டி.என்.ஏ. கட்டமைப்புகள் உடைக்கப்பட்டு பாக்டீரியா வைரஸ்கள் மற்றும் கொரோனா வைரஸ் போன்ற ஒற்றை செல் கிருமிகளை நம்பத் தகுந்த முறையில் கொல்ல முடியும்.

இந்த காற்றுச்சீரமைப்பானில் உள்ள எல்.ஈ.டி. விளக்கில் இருந்து வெளிவரும் குறுகிய அலைநீளம் கொண்ட புற ஊதா சி கதிர்கள் 99.99 சதவீதம் பாக்டீரியா மற்றும் கொரோனா வைரசை அழிக்கும் ஆற்றல் கொண்டவை. வழக்கமான தொழில் நுட்பங்களை விட புற ஊதா சி எல்.ஈ.டி.களில் பாதரசம் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த புதிய காற்றுச்சீரமைப்பானில் புறஊதா சி ஒளி நன்றாக பாதுகாக்கப்படுவதால் இது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது. எனவே இந்த புதிய புற ஊதா சி கதிர்கள் அடிப்படையிலான காற்றுச்சீரமைப்பானை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் குளிர்சாதன எந்திரங்களில் திறம்பட பொருத்தலாம். அழகப்பா பல்கலைக்கழக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த காற்றுச்சீரமைப்பானை பல்கலைக்கழக துறைகள், அலுவலகங்கள், ஆய்வகங்கள் மற்றும் முக்கியமான கூட்ட அரங்குகளில் உள்ள குளிர்சாதன எந்திரங்களில் விரைவில் பொருத்த உள்ளோம்.

இதனால் முழு அடைப்பு முடிந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்கலைக்கழகத்திற்கு திரும்பும்போது தங்கள் கடமைகளை பாதுகாப்பான சூழ்நிலையில் நிறைவேற்ற இது உதவும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பல்கலைக்கழக பதிவாளர் குரு மல்லேஷ் பிரபு, தேர்வுக்கட்டுப்பாட்டு நெறியாளர் கண்ணபிரான், நிதி அலுவலர் கருணாநிதி, பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி ஆனந்தி, அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் இளங்குமரன், ஆலோசகர் தர்மலிங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Next Story