ராமநாதபுரம், வாலிபர் கொலை வழக்கை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்க வேண்டும் - எச்.ராஜா பேட்டி
ராமநாதபுரம் வாலிபர் அருண்பிரகாஷ் கொலை வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் வசந்தநகர் பகுதியில் அருண்பிரகாஷ் என்ற வாலிபர் 12 பேர் கொண்ட கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் வாலிபர் அருண்பிரகாஷ் குடும்பத்தினரை நேற்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் நடத்தப்படும் முகநூல் பக்கத்தில் இந்த படுகொலை தனிப்பட்ட தகராறில் நடந்தது. யாரும் இதற்கு மதச்சாயம் பூச வேண்டாம். இது இரு குழுக்களுக்கும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த தகராறு என்று வெளியிடப்பட்டுள்ளது.
காவல்துறை சார்பில் நடத்தப்படும் முகநூல் பக்கத்தில் இதுபோல அவதூறு செய்தி வெளியிட்டதற்காக அந்த அட்மின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முகநூல் நிர்வகிக்கும் அட்மினை நீக்கி அவர் மீது விசாரணை நடத்த வேண்டும். வாலிபர் அருண் பிரகாஷ் கொலை வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய குற்றபுலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கண்ட கொலை வழக்கை தேசிய குற்றபுலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க பரிந்துரைக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story