காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக சரிவு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக சரிவு
x
தினத்தந்தி 5 Sept 2020 3:45 AM IST (Updated: 5 Sept 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

பென்னாகரம்,

கர்நாடக மாநில எல்லை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்ராம்பாளையம், கேரட்டி மற்றும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறையத்தொடங்கியது. அதன்படி நேற்று பகல் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்தது.

இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தபோதிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 17 ஆயிரத்து 937 கனஅடி நீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 21 ஆயிரத்து 339 கனஅடியாக அதிகரித்தது. மேலும் நேற்று முன்தினம் 89.50 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 90.36 அடியாக உயர்ந்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கும், கால்வாய் பாசனத்துக்கும் நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று கால்வாய் பாசனத்துக்கு நீர்திறப்பு வினாடிக்கு 700 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

Next Story