கொன்னையார் ஊராட்சியில் 41 மகளிர் குழுக்களுக்கு ரூ.2.68 கோடி வங்கிக்கடன் - கலெக்டர் மெகராஜ் தகவல்
கொன்னையார் ஊராட்சியில் 41 மகளிர் குழுக்களுக்கு ரூ.2.68 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொன்னையார் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக வலுவான மக்கள் அமைப்புகளான ஊராட்சி கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், வேளாண் ஆர்வலர் குழு மற்றும் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கொன்னையார் ஊராட்சியில் தரமதிப்பீடு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, சுழல்நிதி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வாழ்வாதார தொகுப்பு நிதி உள்ளிட்ட நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 41 மகளிர் குழுக்களும் இதுவரை ரூ.2.68 கோடி நேரடி வங்கிக்கடன் பெற்று சிறு உற்பத்தி தொழில்கள், சேவை மற்றும் வணிக உற்பத்தி தொழில்கள் செய்து வருகின்றன. மேலும் கூட்டமைப்பில் இருந்து வாழ்வாதார நிதியாக ரூ.14 லட்சம் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் கடனாக கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட ரூ.14 லட்சம் ரூ.21 லட்சமாக வளர்ச்சி அடைந்து உள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் தேவையின் அடிப்படையில் நுண்நிதி கடன் திட்டம் தயாரிக்கப்பட்டு ரூ.1 கோடியே 40 லட்சத்து 20 ஆயிரம் வங்கி பெருங்கடன் பெறுவதற்காக இந்தியன் வங்கி எலச்சிப்பாளையம் கிளையில் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியினை கொண்டு புதிய தொழில்களை தொடங்கிடவும், தொழில்களை மேம்படுத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் வேளாண் ஆர்வலர் மற்றும் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு நிலக்கடலையை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான செக்கு கடலை எண்ணெய், கடலை மிட்டாய் மற்றும் நிலக்கடலை சார்ந்த பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்திட ஏதுவாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் மெகராஜ் பேசினார்.
கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் மணி, உதவி திட்ட அலுவலர் சாந்தசீலன், எலச்சிபாளையம் ஆணையாளர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாவதி, ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், ஊராட்சி செயலர் கருணாகரன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story