ஊட்டியில், அரசு மருத்துவ கல்லூரி அமைக்க முதற்கட்ட பணிகள் மும்முரம்


ஊட்டியில், அரசு மருத்துவ கல்லூரி அமைக்க முதற்கட்ட பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 5 Sept 2020 4:00 AM IST (Updated: 5 Sept 2020 9:47 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஊட்டி,

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதித்தது. அதில் 11-வது புதிய அரசு மருத்துவ கல்லூரி கட்ட நீலகிரி மாவட்டம் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. ரூ.447 கோடியே 32 லட்சம் மதிப்பில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி கட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி அடிக்கல் நாட்டினார். மருத்துவ கல்லூரிக்காக வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து 1,800 மரங்களை வெட்டி அகற்ற குறியீடு போடப்பட்டு உள்ளது. மரங்களை படிப்படியாக வெட்டி அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக 130 மரங்கள் வெட்டப்பட்டு, மரங்களின் வேர் பகுதிகளை அகற்றும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த இடத்தில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக சமன்படுத்தப்படுகிறது. மேலும் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டுவதற்காக முதலில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் குழி தோண்டப்பட்டு கான்கிரீட் போடப்பட்டு வருகிறது.

கட்டிடம் கட்டுவதற்காக கொண்டு வரப்படும் சிமெண்டு, கம்பிகள் போன்றவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு தற்காலிகமாக செட் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கேயே பொதுப்பணித்துறை அலுவலர்கள் பணிபுரிய 3 கண்டெய்னர்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டு இருக்கிறது. உள்ளே கணினி வசதி உள்ளது. தினமும் நடைபெறும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 15 ஏக்கர் நிலத்தில் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிபவர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்ட சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் லாரிகளில் பொருட்களை கொண்டு செல்ல முடியும். தற்போது மழை பெய்யாததால் பொதுப்பணித்துறை மூலம் சுற்றுச்சுவர் அமைப்பது, மருத்துவ கல்லூரி கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ரவீந்திரன் கூறியதாவது:-

எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சுற்றுச்சுவர் அமைத்து சாலை போடப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்படுகிறது. வனத்துறை மூலம் மரங்களை வெட்டி அகற்றும் பணி நடக்கிறது. 15 ஏக்கர் நிலத்தில் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிபவர்கள் தங்குவதற்காக ஐந்து பிளாக்கில் குடியிருப்புகள் கட்டப்படுகிறது. தரைத்தளம், முதல் தளத்துடன் கூடிய மருத்துவக்கல்லூரி 650 படுக்கை வசதிகளுடன் தயாராகிறது. பொது மருத்துவம், அனிமியா, ரேடியாலஜி, காசநோய், அறுவை சிகிச்சை, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், மைக்ரோபயாலஜி பயோகெமிக்கல் உள்பட 21 பிரிவுகள் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்படுகிறது. வருகிற 2021-22-ம் ஆண்டில் 150 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட உள்ளதால், மருத்துவ கல்லூரி விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story