காதலிக்க மறுத்ததால் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிடுவதாக மாணவிக்கு மிரட்டல் - பெயிண்டர் போக்சோவில் கைது
காதலிக்க மறுத்த மாணவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவையை அடுத்த மதுக்கரை பச்சாபாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 20). பெயிண்டர். இவருக்கு கோவையை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியுடன் நட்பு ஏற்பட்டது. அந்த மாணவி, தமிழ்ச்செல்வனுடன் சகஜமாக பேசினார். ஆனால் தமிழ்ச்செல்வன் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி அவர் அந்த மாணவியிடம் கூறினார். ஆனால் அவரது காதலை ஏற்க மாணவி மறுத்து விட்டார். மேலும், தான் நட்பு முறையின் பழகியதாக கூறி உள்ளார். ஆனாலும் தமிழ்ச்செல்வன் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்கும்படி கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் அந்த மாணவியை சந்தித்து தன்னை காதலிக்கும்படி கூறி உள்ளார். அதை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தமிழ்ச்செல்வன், மாணவியை தாக்கினார். மேலும் தன்னை காதலிக்க வில்லை என்றால் உனது புகைப்படத்தை மோசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி மீண்டும் தாக்கினார்.
இதில் காயம் அடைந்த மாணவி, மயங்கி விழுந்தார். உடனே தமிழ்ச்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து மயக்கம் அடைந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக மாணவியின் தாயார் மதுக்கரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story