ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.34 லட்சம் பணம், நகை கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.34 லட்சம் பணம், நகை கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Sept 2020 3:45 AM IST (Updated: 5 Sept 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.34 லட்சம் பணம், நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சரவணம்பட்டி,

கோவை சரவணம்பட்டி சித்ரா நகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 70). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி மாசிலாமணி. இவர்களது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துரைசாமியும், மாசிலாமணியும் வீட்டை பூட்டிவிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு வெளியே சென்று விட்டு காலை 8.30 மணிக்கு வீட்டிற்கு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த ரூ.31 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகையை காணவில்லை. அதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதன் மொத்த மதிப்பு ரூ.34 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்த தகவலின் பேரில் சரவணம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் கைவிரல் ரேகை நிபுணர்களும் வந்து அங்குள்ள தடயங்களை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறும்போது, கொள்ளை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அதில், குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்களை பிடித்து விடுவோம் என்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story