பூம்பாறையில் சுவர் இடிந்து விழுந்து 10 கடைகள் சேதம்


பூம்பாறையில் சுவர் இடிந்து விழுந்து 10 கடைகள் சேதம்
x
தினத்தந்தி 5 Sept 2020 11:00 AM IST (Updated: 5 Sept 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல், பூம்பாறை கிராமத்தில் மழை காரணமாக குழந்தை வேலப்பர் கோவிலை சுற்றிலும் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் இருந்த மளிகை, உரக்கடைகள் உள்பட 10 கடைகள் சேதமடைந்தன

கொடைக்கானல், 

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்தமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேல்மலை பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பூம்பாறை கிராமத்தில் மதியம் 1 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக நகரில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் குழந்தை வேலப்பர் கோவிலை சுற்றிலும் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. 

இதில் அப்பகுதியில் இருந்த மளிகை, உரக்கடைகள் உள்பட 10 கடைகள் சேதமடைந்தன. மேலும் அந்த கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களும் நாசமாயின. சுற்றுச்சுவர் இடிந்து விழுவதை பார்த்ததும் கடைகளில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

சேதமடைந்த கடைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story